Sep 3, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர் (03 Sep 06)

இது போட்டிக்கான படைப்பு மட்டுமல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் புதிரும் கூட.

"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா" இந்த கருத்தை பிரபலமான பலரிடம் கூறினேன். அவர்கள் அவர்களுக்கேயுரிய பாணியில் அதை விரித்தார்கள். எந்தப்பாணி யாருடையது என்பதை மட்டும் மறந்துவிட்டேன். அதுதான் புதிர்.

1. அழகுக்கு அவள் சுரங்கம்
பேயும் அவளிடம் இறங்கும்.
பதினெட்டு வயது பியூட்டி
ஓட்டி வந்தாள் ஸ்கூட்டி
இதயம் ஆனது தெஃப்ட்
கொஞ்சம் கிடைக்குமோ லிஃப்ட்?
______________________________________

2. பைக் ஆண். அதன் ஹாண்டில்பார் பெண். சகலருக்கும் இது புரிவதில்லை. புரிந்தவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள், புரியாதவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

பைக்கும் ஹாண்டில்பாரும் போல ஆண் துணை பெண்ணுக்கும், பென் துணை ஆணுக்கும் இங்கே கல்பகோடி ஆண்டுகளாக ஜனித்துவந்திருக்கும் சாஸ்வதமான உண்மை. தியானத்துக்கு குரு தேவை. மோகத்துக்குத் தேவையில்லை.

மோகனும் அதை மறுக்கும் மனநிலையில் இல்லை. மன்மதன் அம்புகள் விட்டான், மோகனுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. அவள் காதோரம் குசுகுசுப்பாய் நேற்றுப்பாடிய பாடல் நினைவாடியது..

"ஓடும் தண்ணியிலே பாசியில்லையே..
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயுமில்லையே.."

ப்ரியா எதிரே வண்டியில் வந்தாள். நிறுத்தினான். அவள் புருவம் உயர்த்தி "என்ன" என்பதாய்க்கேட்டாள்.

"கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?"
______________________________________

3. "நிறுத்து"

"ஏன்"

"போகணும்"

"எங்கே"

"நீ போற இடத்துக்குத் தான்"

"என்னை ஏன்"

"நீ அழகா இல்ல! படிக்கல! உன்னை எனக்குப் புடிக்கல.. உன்னை லவ் பண்ணிடுவேன்னோன்னு நினைக்கல..ஆனா, நான் போற இடத்துக்கு நீதான போறே.."
______________________________________


4. "மச்சி அவ வர்றாடா.. இன்னிக்காவது உன் மனசுலே இருக்கறத அவகிட்டே மறைக்காம சொல்லிடு"

"அவ கிட்டே கேக்கறதுக்கு எனக்கு தயக்கமில்லைடா.. ஆனா, நான் கேட்டு அவ மறுக்க வேண்டிய நிலைமை இருந்தா அவ மனசு வேதனைப்படுமே.. அவ வேதனையத் தாங்கற சக்தி எனக்கு இல்லைடா"

"மச்சி லிப்டுங்கறது பீச்சுல போடற மிளகா பஜ்ஜி மாதிரிடா.. சூடா இருக்கும்போது சாப்டா மட்டும்தாண்டா டேஸ்ட்டு..லேட்டு பண்ணே, வேற எவனாவது கொத்திகிட்டு போயிடுவான்.. இன்னிக்கும் எப்படியும் அவகிட்டே கேட்டுடுடா"

______________________________________

5. வாகனம்..
சக்கரத்தைக் கண்டுபிடித்தவனே
நித்தியம் கொண்டாடும் அதிசயம்..
அதன் பாகம் மறைத்திருக்கும் ரகசியம்.
காலதேவனின் காலில்விழாமல் நேரம் சேமிக்க அவசியம்.

புதன் கிரகம் ஆக்ஸிஜன் இல்லாதது..
புதுவண்டியும் எரிபொருள் இன்றிச் செல்லாதது.

சில வண்டிகளும் ஆண்கள் போலத்தான்..
தாவணி சேலையை உறுவும்.
இருந்தாலும்,
லிஃப்டில் கணியும் உறவும்.

______________________________________

6. "நீங்கதானே மிஸ்டர் வாதூலன்?"
வாதூலன் வியர்த்தார். கையினின்றும் குளிர்கண்ணாடியை முகத்துக்கு அனுப்பினார்.
"நீங்க...... யாரு...... உங்களுக்கு........... என்ன............வேணும்?"
"அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். நீங்க வெச்சிருக்க காரு ஜெர்மன் மேக்தானே?"
"ஆமா.. BMW.. 150 குதிரைச் சக்தி.... புரியும்படியா சொல்லணுமுன்னா ஒரு 50 யானைய இழுத்துகிட்டுப் போற சக்தி இதுக்கு இருக்கு"
"இதுக்கு எண்ட்ரி டாக்ஸ், ரோட் டாக்ஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?"
"போன வாரம்தான்.... ரெஜிஸ்டர் பண்ணேன்... ஆமா.. நீங்க யாரு?"
இறுக்கமான முகத்தைச் சற்றுத் தளர்த்தினான். சிரித்தவாறே கேட்டான்.
"என் பேரு ரகோத்தமன்... W & W கம்பெனியிலே செல்லிங் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்.. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"

______________________________________

7. ஆறுமுகக்கோனாரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஏனென்றால் ஆறுமுகக்கோனார் ஒரு சாதாரண மனிதன். வேகமும் புழுதியும் அடிக்கின்ற இந்தப் பட்டணத்திலே ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி.

அவனை எனக்கு ஆறு மாதங்களாகத் தெரியும். பஞ்சாய் நரைத்த முடி, குழி விழுந்த கன்னங்கள், நொண்டி நொண்டி நடப்பான். வாழ்வின் சுமை அவனை வளைத்துப்போட்டு விட்டது.

அவனை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவன் போக விருப்பப்படும் இடத்துக்கு மட்டுமேதான் போவான். இயந்திர உலகத்தில் இப்படியும் ஒரு பழையகாலத்து ஆளா என்று வியக்காதீர்கள்.

காலையில் எழுந்து வேலை தொடங்கினால் ஐஸ்ஹவுஸ், அங்கிருந்து பிராட்வே உணவுக்கு ராயபுரம் திரும்புவான். இந்த வழியில் செல்லும் சவாரிகளை மட்டுமே ஏற்றுவான்.

அதுசரி.. அவன் வாழ்க்கை அவனுடையது. அவனை யார் தன் வழிக்குத் திருப்ப முடியும்?

யார்தான் யாரைத்தான் தன்வழிக்குத் திருப்ப முடியும்?

அன்று ஒரு அதிசயம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டம்போட்ட லுங்கிக்காரன் வந்து "தேனாம்பேட்ட வர்றியா" என்றான்.

மறுத்துவிடுவான் என்றே நினைத்துக்கொண்டு பார்த்தேன்.

"சரி ஏறு" என்றானே பார்க்கலாம்.

இந்த மாற்றத்துக்கு எனக்குக் காரணம் புரியவில்லை.

வண்டி திரும்பியதும்தான் கவனித்தேன். லுங்கிக்காரன் ரஜினி பனியன் போட்டிருந்தான்.

______________________________________

8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

"என்றா பஞ்சாயத்து?"

"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"

"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"

"என்றா கேட்டானாம்?"

"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"

"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"

"நான் இருக்கேனுங்க"

"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"

"வெச்சுருக்கேனுங்கய்யா"

"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."

"நான் பாத்தேனுய்யா"

"என்றா கண்ணு பாத்த?"

"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"

"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

______________________________________

9. பொழுது மலரத் தொடங்கிவிட்டது. ஆதவன் தன் கிரணங்களை அடர்ந்த காட்டுக்கு உள்ளேயும் பாய்ச்சினான்.

இளஞ்செழியன் எழுந்துவிட்டான். பூங்குழலியையும் எழுப்ப யத்தனித்தான்.

"இளவரசி"

"ம்"

கார்மேகமாய் விரிந்திருந்த அவள் கூந்தலினூடே தன் கரங்களை விட்டு மெதுவாகக் கோதினான் இளஞ்செழியன். போர் புரிவதெல்லாம் வீண், இவளோடு இப்படியே காலத்தைக் கழித்துவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கும் என்று எண்ணினான். அதே நேரத்தில் ஒரு போர்வீரன் இவ்விதம் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், மீண்டும் எழுப்பினான்.
"இளவரசி"

"ம்"

"எழுந்திருங்கள்.. நம் கோட்டை திறந்துவிட்டிருப்பார்கள். யவனர்கள் சாலைவழி செல்லத் தொடங்கிவிட்டார்கள்"

"தளபதி, உங்களை ஒன்று கேட்டால் தவறாய் எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?"

"இளவரசி, நீங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுப்பதா, கட்டளையிடுங்கள்"

"சரியான தூக்கம் இல்லாமல் கால் வலிக்கிறது. என்னை உங்கள் குதிரையிலே வைத்து கோட்டை வரை கொண்டு செல்கிறீர்களா?"

______________________________________

10. இற்றைத் தினத்தில் காட்டாட்சி முடிந்து நல்லாட்சி தொடங்குகின்ற நாளிலே, இதுவரை சொல்லாத ஒன்றை உன்னுடன் பகிர விழைகிறேன். இதய தெய்வமும், பகுத்தறிவுப் பகலவனும் கட்டிக்காத்த இந்த மாபெரும் இயக்கம் சூதிடமும் சூழ்ச்சியிடமும் பின் தங்கிவிட்ட காரணத்தால் நாட்டில் நடந்துவிட்ட அவலங்களை நீ நன்கறிவாய்! இதயத்துக்குப் பதில் களிமண்ணைக்கொண்ட காவல் உடையில் வந்தென்னை வெஞ்சிறை அனுப்பத் துடித்த அம்மையாரின் கைக்கூலிகள் என்னை உருட்டுக்கட்டையாய்த் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிய கதையையும் நீ மறந்திருக்கமாட்டாய். பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் அம்மையாரை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தபோது நடந்ததன் எதிரொலியே நீ அன்று பார்த்த காட்சி என்றால் உனக்கு வியப்பாய் இருக்கும். அன்று அம்மையார் தன் வாகனம் பழுதடைந்ததால் என்னிடம் லிஃப்ட் கேட்டார். நான் மறுதலித்துவிட்டேன். லிஃப்ட் தர மாட்டேன் என்று கூறவில்லை.. இதயத்தில் அண்ணாவையும், உள்ளத்திலே உன்போன்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களையும் வைத்திருந்ததால் என் சிறு வாகனம் அம்மையாரைத் தாங்காது என்றுதான் கூறினேன். அம்மையாரை நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. நடந்தால் அவர் உடல் மேலும் பொலிவடையும் என்ற நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.நான் செய்தது தவறா? இதை நினைவில் கொண்டு அம்மையார் எனக்கு பழிக்குப் பழியாய் நீதிமன்றம் வரை தன் கைக்கூலி காவலாளரை வைத்து லிஃப்ட் தரவைத்தாரே - அது முறையா? சிந்தித்துப்பார் உடன்பிறப்பே!

______________________________________

போட்டிக்கான பதில்களை பின்னூட்டம் மூலம் மட்டுமே தரவேண்டும். நீதிபதியின் தீர்ப்பே முடிவானது. ஒரு நபர் அதிகபட்சம் ஆயிரம் பின்னூட்டங்கள் மட்டுமே போடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வந்தால் ... வந்துட்டுப் போகட்டுமே.. நான் என்ன பரிசா தரப்போறேன்!

37 பின்னூட்டங்கள்:

பூனைக்குட்டி said...

1) vaali.
3) maniratnam.
4) murali?
6) sujatha.
8) ravikumar
10) kalainjar

லதா said...

1. டி. (விஜய) ராஜேந்தர்
2. பாலகுமாரன்
3. மணிரத்னம்
4. கிரேசி மோகன் / (பேசியவர்கள் - இதயம் முரளி - சின்னி ஜெயந்த்)
5. வைரமுத்து
6. சுஜாதா
7. தெரியவில்லை
8. விஜயகுமார் / சரத்குமார்
9. சாண்டிலயன்
10. கலைஞர்

கதிர் said...

1.ல.தி.மு.க தலைவர் ராஜேந்தர்
2.கண்ணதாசன்
3.மாதவன்
4.முரளி
5.வாலி
6.ராஜேஷ்குமார்
7.ராமகிருஷணன்
8.சரக்குகுமார்
9.சாண்டில்யன்
10.கலைஞர்

சரிங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

இது வரை மூன்று பின்னூட்ட்ங்கள் வந்துள்ளன. கொஞ்ச நேரம் கழித்து பதிப்பிக்கிறேன்.

1. மோகன் தாஸ், நீங்கள் முயற்சித்த ஆறில் ஒன்று தவறு. க்ளூ ............ (ஆமா, என்ன மளிகைக்கடை லிஸ்ட் மாதிரி விடை மட்டும் எழுதி இருக்கீங்க? நல்லா இருக்கு மோசமா இருக்கு ஒண்ணும் கிடையாதா?)

2. லதா, பத்தும் முயற்சித்திருக்கிறீர்கள். ஏழு சரி.நீங்களும் விமர்சனம் ஒண்ணும் எழுதலியே ஏன்?

3. தம்பி, நீங்கள் ஆறு சரி.

எல்லாருக்கும் இன்னும் சான்ஸு தரேன்.. (டேய் பினாத்தல் அடங்க மாட்டே!)

பினாத்தல் சுரேஷ் said...

என்னடா இவன் போட்டிக்கு மட்டுமே எழுதறானே ன்னு பாக்காதீங்க! இந்தியப் பயணக்குறிப்புகள் எழுதி போஸ்ட் பண்ண முடியாம தவிக்கிறேன். எப்படியும் நாளைக்கு சக்ஸஸ் ஆகிடும்.

ஓகை said...

அமர்க்களம். இத்தனை வகை எழுத்துக்களை உள்ளடக்கி வைத்திருக்கிறீர்கள். நிறைய ழுதுங்கள். என்னால் சில விடைகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. நன்றாக யோசித்து விடை எழுத முயல்கிறேன்.

ஓகை said...

1.வாலி
2.
3.மணிரத்தினம்
4.T.ராஜேந்தர்
5.வைரமுத்து
6.சுஜாதா
7.
8.
9.சாண்டில்யன்
10.கலைஞர்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஓகை.

உங்கள் 7 முயற்சிகளில் 5 சரி. இன்னும் கொஞ்சம்தான். விடாதீங்க!

கதிர் said...

சுரேஷ்,

எதெது தப்புன்னு சொன்னாத்தானே அடுத்த முயற்சி செய்ய முடியும், இப்படி மொட்டையா நாலு தப்புன்னு சொன்னா நான் எங்கன்னு போய் தேடுவேன். நமக்கு பொது அறிவு கம்மிங்க!!

வழக்கம்போலவே வித்யாசமா, குசும்போட தான் எழுதியிருக்கிறீர்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தம்பி.

உங்கள் விடைகளில் நீங்கள் மறு வாசிப்பு செய்யவேண்டியவை: 1, 2 5 & 7

ஓக்கே?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தம்பி.

உங்கள் விடைகளில் நீங்கள் மறு வாசிப்பு செய்யவேண்டியவை: 1, 2 5 & 7

ஓக்கே?

கதிர் said...

நன்றி!!

இப்போ முயற்சி பண்றேன்!!

சனியன் said...

1. டி. ராஜேந்தர்
2. தி.ஜா (அ) பாலகுமாரன்
3. மணிரத்னம்(சுஜாதான்னு கூட சொல்லலாம். ஏன்னா அவர்தான வசனம் எழுதறாரு)
4. விவேக்
6. சுஜாதா
8. கே.எஸ்.ஆர்
9. ச்ஆண்டில்யன்
10. மு.க.

சனியன் said...

5-ம் 7-ம் என்னதான் யோசிச்சும் தெரிய மாட்டேங்குது. யோசிச்சு யோசிச்சு மண்டை காயுதுங்க.

போட்டின்னு வ்அந்துட்டா பினாத்தலார் சிங்கம்னு மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கறீங்க. பினாத்தலுக்கு பதில் கலக்கல்னு வெச்சூரலாம். வெற்றிபெர வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சனியன்.

நீங்க எழுதனிதிலே 1, 4 & 6 மறுபடி படிச்சிப் பாருங்க. 5 & 7 கூட அவ்வளோ கஷ்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை.

பினாத்தல் சுரேஷ் said...

இதுவரை வந்த விடைகளில் பெரும்பாலும் இருக்கும் குழப்பத்தைத் தீர்த்து விடுகிறேன்.,

இந்தப்பத்தில் இல்லாதவர்கள்:

டி ராஜேந்தர்,
சுஜாதா.

இவர்களைத் தவிர்த்து யோசிக்கவும்

லதா said...

டி ராஜேந்தர் மற்றும் சுஜாதா இல்லை என்று நீங்கள் எழுதியதால்

1. வாலி

Prabu Raja said...

katha elutha vendiyathuthana?
theve illama ithellam ethukku..
ennavo ponga
6aavathu Rajesh kumar thana?

Anonymous said...

சுரேஷு,

1)வாலி
3)மணிரத்னம்
5)வைரமுத்து
6)ராஜேஷ்குமார்
7)ஜெயகாந்தன்
8)சரத்/விஜய்/ரவி இவர்களில் ஏதோ ஒரு குமார்
9)சாண்டில்யன்
10)கருணாநிதி

ரெண்டும் நாலும் காலைவாரிடுச்சு.
அதையும் ஃபோனல்யே சொல்லித் தொலைச்சா என்னவாம்? :-)

சாத்தான்குளத்தான்

பழூர் கார்த்தி said...

3. மணிரத்னம்
8. கே.எஸ். ரவிக்குமார்
10. கருணாநிதி

சரியா தல ????

பழூர் கார்த்தி said...

நல்லா புதிர் போட்ருக்கீங்க

படைப்புகள் பற்றிய விமர்சனத்திற்கு
இங்கே
பாருங்கள்


வாழ்த்துக்கள் :-)

மணியன் said...

வழக்கம்போல கலக்கியிருக்கீங்க !! பாராட்டுக்கள்!
புதிர் ? - அது புதினம் படிப்பவர்களுக்கே :))

Anonymous said...

1) வாலி
2) சுகி சிவம்
3) மணி ரத்னம்
4) விக்ரமன்
5) வைரமுத்து
6) ராஜேஷ் குமார்
7) பாலகுமாரன்
8) K.S.ரவிக்குமார்
9) சாண்டில்யன்
10) கலைஞர்

-அபுல்
abulfasal@gmail.com

இப்னு ஹம்துன் said...

1.வாலி
2.பாலகுமாரன்
3.மணிரத்னம்
4.பாக்யராஜ்
5.வைரமுத்து
6.ராஜேஷ் குமார்
7.----------
8.-------------
9.சாண்டில்யன்
10. கலைஞர் மு. கருணாநிதி

ஒண்ணுக்கு முன்னாடியும் பத்துக்கு பின்னாடியும் 'பெனாத்தல்':-)).

பினாத்தல் சுரேஷ் said...

இதுவரை 14 பதில்கள் வந்துள்ளன.

இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன். (220 என்று வைத்துக்கொள்வோமே) வந்தவுடன் மொத்த பதில்களையும் பதிப்பித்து விடுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

பிரபு ராஜா, நீங்களே இப்படிச் சொல்லலாமா?

இந்த தலைப்புக்கு கதை ஒண்ணும் தோணலை, கலாய்க்கத்தான் ஐடியா வந்தது.. அம்புட்டுதேன் மேட்டரு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சோம்பேறிப்பையன். நீங்க ட்ரை செய்த மூணும் சரியே.

நன்றி மணியன். அது என்ன புதினம் படிக்கறவங்களுக்கு விட்டுட்டு ஒதுங்கிக்கிட்டீங்க? இதுலே சினிமா, பாடல்கள், அரசியல், வெகுஜன நாவல்கள், சிற்றிலக்கியம் எல்லாமே இருக்கே.. ஒரு லார்ஜ் ஸ்கேல் இலக்கிய மிமிக்கிரின்னு சொல்லலாமே..

பினாத்தல் சுரேஷ் said...

முந்தைய பின்னூட்டத்தில் 220 என்று போட்டுவிட்டேன் - 20 என்று போட! அவ்வளோ ஆசையெல்லாம் கிடையாது எனக்கு!

கதிர் said...

//இந்த தலைப்புக்கு கதை ஒண்ணும் தோணலை, கலாய்க்கத்தான் ஐடியா வந்தது.. அம்புட்டுதேன் மேட்டரு.//

இதில எந்த உள்குத்தும் இல்லையே!!

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி, என்ன எதிர்பார்க்கறீங்க?

உள்குத்து எதுவும் கிடையாதய்யா.. எதோ போட்டு வாங்கிற மாதிரி தெரியுதேய்யா!

Anonymous said...

என்ன பெனாத்தல் சுரேஷ் நேற்று நான் 10 விடைகளும் அனுப்பியிருந்தேனே..7/8ஆவது சரியாயிருக்குமென நினைக்கிறேன்.

முடிவுகளை இந்த முகவரியில் தெரிவிக்கவும்.
abulfasal@mailglobal.net,
abulfasal@gmail.com
ம்ற்றபடி உங்களின் படைப்புகளைத் தற்போதுதான் வாசிக்கிறேன். நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

மீள்பதிவெல்லாம் கூட போட்டுப்பாத்துட்டேன்.. 14க்கு மேலே தேறலே.. எனவே,

விடைகள்:

1. வாலி
2. பாலகுமாரன்
3. மணிரத்னம் (மாதவன் என்று சொல்லியிருந்ததையும் ஏற்றுக்கொண்டேன்)
4. விக்கிரமன், கதிர் போன்ற காதல் பட இயக்குநர்கள், முரளி, சின்னி ஜெயந்த் - எதைச்சொன்னாலும் சரிதான்
5.வைரமுத்து
6.ராஜேஷ்குமார்
7. ஜெயகாந்தன்
8. விஜயகுமார் / சரத்குமார் / கே எஸ் ரவிக்குமார் / ஈரோடு சௌந்தர் எல்லாம் சரிதான்
9. சாண்டில்யண்
10. கலைஞர்.


8/10 வாங்கிய லதா, இப்னு ஹம்துன் மற்றும் அபுல் பஸலுக்கு வாழ்த்துக்கள். பிட்டடித்து பதில் சொன்ன ஆசானுக்கு நன்றி?!

இரண்டாம் முயற்சி செய்திருந்தால் இன்னும் வாங்கியிருக்கக்கூடிய தம்பி, சனியன், வியாபாரி, லியோ சுரேஷ் மற்றும் சோம்பேறிப்பையனுக்கு நன்றிகள்.
முயற்சித்த மற்றவர்களுக்கு நன்றிகள்.

ஓட்டளிக்க மறவாதீர்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

லியோவின் பதில் வேறு பதிவுக்குச் சென்றுவிட்டது:

நமக்கெல்லம் அவ்வளவு கிட்னி போதாது நைனா.2 வாலி 3.மணிரத்னம் 4.வைரமுத்து 8.சரத்குமார் 9.வடிவேலு 10.கருணாநிதி.
(என் 050 நம்பர் அனுப்பியிருக்கிறேன்)
லியோ சுரேஷ்
துபாய்

பினாத்தல் சுரேஷ் said...

Rajamohan.C has left a new comment on your post "லிப்ட் புதிர், சில குறிப்புகளோடு (05 Sep 06)":

1. வாலி
2. பால குமாரன்
3. மணிரத்னம்
4. டி. ராஜேந்தர்
5. வைரமுத்து
6. ராஜேஷ்குமார்
7. சுஜாதா
8. கே.எஸ். ரவிக்குமார்
9. சாண்டில்யன்
10. கலைஞர்

நன்றி ராஜமோகன், 8 /10! ஜெயகாந்தனையும் கதிரையும் மட்டும் குழப்பி விட்டீர்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

மக்களே,

இதுவும் தேன்கூடு போட்டியின் பதிவுகளில் ஒன்று சாமி, மறந்திடாதீங்க!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முரட்டுக்காளை.

யோசிப்பவர் said...

//8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)

"என்றா பஞ்சாயத்து?"

"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"

"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"

"என்றா கேட்டானாம்?"

"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"

"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"

"நான் இருக்கேனுங்க"

"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"

"வெச்சுருக்கேனுங்கய்யா"

"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."

"நான் பாத்தேனுய்யா"

"என்றா கண்ணு பாத்த?"

"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"

"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."

ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)//

ஐயோ! அம்மா!! முடியலை!!!
சிரிச்சு....
சிரிச்சு.......
சிரிச்சு........
சிரிச்சு...........
ஐயோ! அப்பா!!!


ம்ம்ம்!! இவ்வள்வு நாளா இதை படிக்காம போய்ட்டேனே! சுப்பர்

 

blogger templates | Make Money Online