இந்தப்புதிருக்கு இதுவரை 14 பதில்கள் மட்டுமே வந்திருக்கின்றன. மிகக்குறைவு என்று நான் கருதுவதால் இந்த மீள்பதிவு, விடையைக் கண்டுபிடிக்க சில குறிப்புகளுடன்.
1. அழகுக்கு அவள் சுரங்கம்
பேயும் அவளிடம் இறங்கும்.
பதினெட்டு வயது பியூட்டி
ஓட்டி வந்தாள் ஸ்கூட்டி
இதயம் ஆனது தெஃப்ட்
கொஞ்சம் கிடைக்குமோ லிஃப்ட்?
குறிப்பு: ஆங்கிலம் தமிழ் ரைமிங், அதிலே இவரோ பெரும் கிங்!
2. பைக் ஆண். அதன் ஹாண்டில்பார் பெண். சகலருக்கும் இது புரிவதில்லை. புரிந்தவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள், புரியாதவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
பைக்கும் ஹாண்டில்பாரும் போல ஆண் துணை பெண்ணுக்கும், பென் துணை ஆணுக்கும் இங்கே கல்பகோடி ஆண்டுகளாக ஜனித்துவந்திருக்கும் சாஸ்வதமான உண்மை. தியானத்துக்கு குரு தேவை. மோகத்துக்குத் தேவையில்லை.
மோகனும் அதை மறுக்கும் மனநிலையில் இல்லை. மன்மதன் அம்புகள் விட்டான், மோகனுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. அவள் காதோரம் குசுகுசுப்பாய் நேற்றுப்பாடிய பாடல் நினைவாடியது..
"ஓடும் தண்ணியிலே பாசியில்லையே..
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயுமில்லையே.."
ப்ரியா எதிரே வண்டியில் வந்தாள். நிறுத்தினான். அவள் புருவம் உயர்த்தி "என்ன" என்பதாய்க்கேட்டாள்.
"கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?"குறிப்பு: தடித்த எழுத்துகள், தியானம், மோகம், பாடல்!
3. "நிறுத்து"
"ஏன்"
"போகணும்"
"எங்கே"
"நீ போற இடத்துக்குத் தான்"
"என்னை ஏன்"
"நீ அழகா இல்ல! படிக்கல! உன்னை எனக்குப் புடிக்கல.. உன்னை லவ் பண்ணிடுவேன்னோன்னு நினைக்கல..ஆனா, நான் போற இடத்துக்கு நீதான போறே.."குறிப்பு: தேவையில்லை
4. "மச்சி அவ வர்றாடா.. இன்னிக்காவது உன் மனசுலே இருக்கறத அவகிட்டே மறைக்காம சொல்லிடு"
"அவ கிட்டே கேக்கறதுக்கு எனக்கு தயக்கமில்லைடா.. ஆனா, நான் கேட்டு அவ மறுக்க வேண்டிய நிலைமை இருந்தா அவ மனசு வேதனைப்படுமே.. அவ வேதனையத் தாங்கற சக்தி எனக்கு இல்லைடா"
"மச்சி லிப்டுங்கறது பீச்சுல போடற மிளகா பஜ்ஜி மாதிரிடா.. சூடா இருக்கும்போது சாப்டா மட்டும்தாண்டா டேஸ்ட்டு..லேட்டு பண்ணே, வேற எவனாவது கொத்திகிட்டு போயிடுவான்.. இன்னிக்கும் எப்படியும் அவகிட்டே கேட்டுடுடா"குறிப்பு: மச்சி!, லிப்டுங்கறது..
5. வாகனம்..
சக்கரத்தைக் கண்டுபிடித்தவனே
நித்தியம் கொண்டாடும் அதிசயம்..
அதன் பாகம் மறைத்திருக்கும் ரகசியம்.
காலதேவனின் காலில்விழாமல் நேரம் சேமிக்க அவசியம்.
புதன் கிரகம் ஆக்ஸிஜன் இல்லாதது..
புதுவண்டியும் எரிபொருள் இன்றிச் செல்லாதது.
தாவணி சேலையை உறுவும்.
இருந்தாலும்,
லிஃப்டில் கணியும் உறவும்.
குறிப்பு: சாதா சந்தப்பாடலினூடே அறிவியல்!
6. "நீங்கதானே மிஸ்டர் வாதூலன்?"
வாதூலன் வியர்த்தார். கையினின்றும் குளிர்கண்ணாடியை முகத்துக்கு அனுப்பினார்.
"நீங்க...... யாரு...... உங்களுக்கு........... என்ன............வேணும்?"
"அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். நீங்க வெச்சிருக்க காரு ஜெர்மன் மேக்தானே?"
"ஆமா.. BMW.. 150 குதிரைச் சக்தி.... புரியும்படியா சொல்லணுமுன்னா ஒரு 50 யானைய இழுத்துகிட்டுப் போற சக்தி இதுக்கு இருக்கு"
"இதுக்கு எண்ட்ரி டாக்ஸ், ரோட் டாக்ஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?"
"போன வாரம்தான்.... ரெஜிஸ்டர் பண்ணேன்... ஆமா.. நீங்க யாரு?"
இறுக்கமான முகத்தைச் சற்றுத் தளர்த்தினான். சிரித்தவாறே கேட்டான்.
"என் பேரு ரகோத்தமன்... W & W கம்பெனியிலே செல்லிங் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்.. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"
குறிப்பு: புள்ளிகள், தடித்த எழுத்துகள்
7. ஆறுமுகக்கோனாரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஏனென்றால் ஆறுமுகக்கோனார் ஒரு சாதாரண மனிதன். வேகமும் புழுதியும் அடிக்கின்ற இந்தப் பட்டணத்திலே ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி.
அவனை எனக்கு ஆறு மாதங்களாகத் தெரியும். பஞ்சாய் நரைத்த முடி, குழி விழுந்த கன்னங்கள், நொண்டி நொண்டி நடப்பான். வாழ்வின் சுமை அவனை வளைத்துப்போட்டு விட்டது.
அவனை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவன் போக விருப்பப்படும் இடத்துக்கு மட்டுமேதான் போவான். இயந்திர உலகத்தில் இப்படியும் ஒரு பழையகாலத்து ஆளா என்று வியக்காதீர்கள்.
காலையில் எழுந்து வேலை தொடங்கினால் ஐஸ்ஹவுஸ், அங்கிருந்து பிராட்வே உணவுக்கு ராயபுரம் திரும்புவான். இந்த வழியில் செல்லும் சவாரிகளை மட்டுமே ஏற்றுவான்.
அதுசரி.. அவன் வாழ்க்கை அவனுடையது. அவனை யார் தன் வழிக்குத் திருப்ப முடியும்?
யார்தான் யாரைத்தான் தன்வழிக்குத் திருப்ப முடியும்?
அன்று ஒரு அதிசயம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டம்போட்ட லுங்கிக்காரன் வந்து "தேனாம்பேட்ட வர்றியா" என்றான்.
மறுத்துவிடுவான் என்றே நினைத்துக்கொண்டு பார்த்தேன்.
"சரி ஏறு" என்றானே பார்க்கலாம்.
இந்த மாற்றத்துக்கு எனக்குக் காரணம் புரியவில்லை.
வண்டி திரும்பியதும்தான் கவனித்தேன். லுங்கிக்காரன் ரஜினி பனியன் போட்டிருந்தான்.குறிப்பு: ஆட்டோ உழைப்பாளி, பனியன் மீது படத்தால் மனமாற்றம்
8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"
ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)
"என்றா பஞ்சாயத்து?"
"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"
"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"
"என்றா கேட்டானாம்?"
"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"
"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"
"நான் இருக்கேனுங்க"
"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"
"வெச்சுருக்கேனுங்கய்யா"
"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."
"நான் பாத்தேனுய்யா"
"என்றா கண்ணு பாத்த?"
"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"
"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."
ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)
குறிப்பு: தேவையில்லை
9. பொழுது மலரத் தொடங்கிவிட்டது. ஆதவன் தன் கிரணங்களை அடர்ந்த காட்டுக்கு உள்ளேயும் பாய்ச்சினான்.
இளஞ்செழியன் எழுந்துவிட்டான். பூங்குழலியையும் எழுப்ப யத்தனித்தான்.
"இளவரசி"
"ம்"
கார்மேகமாய் விரிந்திருந்த அவள் கூந்தலினூடே தன் கரங்களை விட்டு மெதுவாகக் கோதினான் இளஞ்செழியன். போர் புரிவதெல்லாம் வீண், இவளோடு இப்படியே காலத்தைக் கழித்துவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கும் என்று எண்ணினான். அதே நேரத்தில் ஒரு போர்வீரன் இவ்விதம் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், மீண்டும் எழுப்பினான்.
"இளவரசி"
"ம்"
"எழுந்திருங்கள்.. நம் கோட்டை திறந்துவிட்டிருப்பார்கள். யவனர்கள் சாலைவழி செல்லத் தொடங்கிவிட்டார்கள்"
"தளபதி, உங்களை ஒன்று கேட்டால் தவறாய் எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?"
"இளவரசி, நீங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுப்பதா, கட்டளையிடுங்கள்"
"சரியான தூக்கம் இல்லாமல் கால் வலிக்கிறது. என்னை உங்கள் குதிரையிலே வைத்து கோட்டை வரை கொண்டு செல்கிறீர்களா?"குறிப்பு: கைகளால் தலை கோதுவாராம், ஆனால் பேசும்போது மட்டும் இளவரசி, தளபதி என்று Formal ஆக இருப்பார்களாம்!
10. இற்றைத் தினத்தில் காட்டாட்சி முடிந்து நல்லாட்சி தொடங்குகின்ற நாளிலே, இதுவரை சொல்லாத ஒன்றை உன்னுடன் பகிர விழைகிறேன். இதய தெய்வமும், பகுத்தறிவுப் பகலவனும் கட்டிக்காத்த இந்த மாபெரும் இயக்கம் சூதிடமும் சூழ்ச்சியிடமும் பின் தங்கிவிட்ட காரணத்தால் நாட்டில் நடந்துவிட்ட அவலங்களை நீ நன்கறிவாய்! இதயத்துக்குப் பதில் களிமண்ணைக்கொண்ட காவல் உடையில் வந்தென்னை வெஞ்சிறை அனுப்பத் துடித்த அம்மையாரின் கைக்கூலிகள் என்னை உருட்டுக்கட்டையாய்த் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிய கதையையும் நீ மறந்திருக்கமாட்டாய். பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் அம்மையாரை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தபோது நடந்ததன் எதிரொலியே நீ அன்று பார்த்த காட்சி என்றால் உனக்கு வியப்பாய் இருக்கும். அன்று அம்மையார் தன் வாகனம் பழுதடைந்ததால் என்னிடம் லிஃப்ட் கேட்டார். நான் மறுதலித்துவிட்டேன். லிஃப்ட் தர மாட்டேன் என்று கூறவில்லை.. இதயத்தில் அண்ணாவையும், உள்ளத்திலே உன்போன்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களையும் வைத்திருந்ததால் என் சிறு வாகனம் அம்மையாரைத் தாங்காது என்றுதான் கூறினேன். அம்மையாரை நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. நடந்தால் அவர் உடல் மேலும் பொலிவடையும் என்ற நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.நான் செய்தது தவறா? இதை நினைவில் கொண்டு அம்மையார் எனக்கு பழிக்குப் பழியாய் நீதிமன்றம் வரை தன் கைக்கூலி காவலாளரை வைத்து லிஃப்ட் தரவைத்தாரே - அது முறையா? சிந்தித்துப்பார் உடன்பிறப்பே!
குறிப்பு: தேவையில்லை
5 பின்னூட்டங்கள்:
நமக்கெல்லம் அவ்வளவு கிட்னி போதாது நைனா.2 வாலி 3.மணிரத்னம் 4.வைரமுத்து 8.சரத்குமார் 9.வடிவேலு 10.கருணாநிதி.
(என் 050 நம்பர் அனுப்பியிருக்கிறேன்)
லியோ சுரேஷ்
துபாய்
1. வாலி
2. பால குமாரன்
3. மணிரத்னம்
4. டி. ராஜேந்தர்
5. வைரமுத்து
6. ராஜேஷ்குமார்
7. சுஜாதா
8. கே.எஸ். ரவிக்குமார்
9. சாண்டில்யன்
10. கலைஞர்
நன்றி லியோ சுரேஷ், ராஜமோகன்.
இந்த விடைகளை இங்கே தள்ளியிருக்கிறேன். எல்லா விடைகளும் ஓரிடத்தில் இருக்கட்டுமே என.
ஓட்டு போட்டுட்டேன். போன தடவ வெள்ளி காசு குடுத்து ஏமாத்திட்டீங்க. இந்த தடவ தங்க காசு வந்தே ஆகணும் ஆமா
பிரபு ராஜா,
டாங்க்ஸ்! டீலிங் எல்லாம் அண்டர்கிரவுண்ட்லேயேதான் வச்சுக்கணும். இப்படி ஓப்பன் பண்ணிடக்கூடாது!
Post a Comment