விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்பதை மீண்டும் உணர்ந்தேன். 35 நாட்கள் விடுமுறை, வார இறுதிகளைச் சேர்த்து 36 நாட்கள் இந்தியாவில் இருந்தாலும், திருப்தி இல்லாமலே திரும்பி இருக்கிறேன். Nobody needs a vacation more than who had one just now என்ற மேற்கோளை முழுமையாக அனுபவிக்கிறேன்.
சில வலைப்பதிவர்களைச் சந்திக்க முடிந்தது; செல்பேசி எண் குழப்பங்களில் மறந்த மறைந்த எண்களில் சிலரிடம் மீண்டும் பேச முடியாமல் போனது. TBR ஜோஸப்புடன் அவசரமாக சில நொடிகள் பேசிவிட்டு எண் காணாமல் போனதில் மீண்டும் பேச முடியவில்லை. முத்து (தமிழினி) தன் வருகையை நான் திரும்பும் நாளிலா வைத்திருக்க வேண்டும்? ஒருமுறை தொலை பேச மட்டுமே முடிந்தது. ஒரு முறை பேசியதும் ஏனோ தேவின் எண் காணாமல் போனது. (என் கணினி அறிவு 1/10 என்றால் செல்பேசி அறிவு 0.1/10 மட்டுமே! சென்னையில் மக்கள் SMS அடிக்கும் வேகத்தைப் பார்த்து பொறாமை மட்டுமே பட முடிந்தது:-( )
சென்ற ஒரு வாரத்துக்குள்ளேயே, டோண்டு, என்றென்றும் அன்புடன் பாலா ஆகியோர் முயற்சியில் ஒரு மினி வலைப்பதிவர் சந்திப்பு போண்டா புகழ் உட்லேண்ட்ஸில் நடந்தது. மரபுகளை உடைக்கும் விதமாக நான் போண்டா சாப்பிடவில்லை. ஐகாரஸ் பிரகாஷ், ரோஸா வஸந்த், ரஜினி ராம்கி ஆகியோருடன் சேர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக அரட்டை அடித்தோம். அவசர அழைப்பில் உருப்படாதது நாராயணன் வந்திருந்தார். பேச்சின் அடிநாதம் உள்ளூர் உலக சினிமாக்களை மையப்படுத்தியே இருந்தது. உள்ளூர் சினிமாவைப் பற்றிப் பேசும்போது நான் கலந்துகொண்டேன், உலக சினிமாவைப்பற்றிப் பேச்சு தாவிய போது பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல ஒதுங்கிவிட்டேன். டோண்டு பதிவிட்டுவிட்டார், அதில் பாலாவும் ரோஸாவும் பின்னூட்டமும் இட்டிருக்கிறார்கள்.
ரோஸாவஸந்த்தை ஒரு கோபக்கார இளைஞராகக் கறபனை செய்து வைத்திருந்தேன். அந்த பிம்பம் உடைந்தது. சந்திரமுகி லகலகவைப்பற்றி மட்டும் அவர் பதிவில் இருந்ததுபோலவே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்:-)பாலா பதிவுகளில் உள்ளது போலவே இனிமையாகப் பேசுகிறார். நகைச்சுவைக்கு ரசிகர்.
ஐகாரஸ் பிரகாஷுக்கு நான் முன்னே வேலைசெய்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் என்பதால் என் தொழில் பற்றித் தெரிந்திருந்தது. டேட்டா பேஸ்தான் அவரது தொழில் என்பது படங்களைப்பற்றியும் பாடல்களைப்பற்றியும் பேசியதிலேயே தெரிந்தது!
ரஜினி ராம்கி அமைதியின் மறுவடிவமாக இருந்தார். சந்திரமுகி சிவாஜி போன்ற என் பதிவுகளை நினைவு படுத்தி வம்பிழுக்க முயன்றும் அமைதியிலிருந்து வழுவவில்லை!
டோண்டு பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். சமீபத்தில் (1980களில்) வந்த திரைப்படங்களைப்ப் பற்றிப் பேச்சு வந்தபோது விவாதத்துக்குப் பங்களித்தார்.
நாராயணன் சினிமா (உள்ளூர் உலகம் - இரண்டிலேயும்)அத்தாரிட்டி. பொளந்து கட்டினார்.
ஆமாம், நான் ஜிப்பா அணிந்துவந்தது இட்லிவடைக்கு எப்படித் தெரியும்?
தேன்கூடு பரிசை (அது அந்தக்காலமுங்க! இப்போ எல்லாம் 7வது எட்டாவது இடத்தைப் பிடிக்கிறதே பெரும்பாடாப் போச்சு!) புத்தகங்களாகப் பெற கிழக்கு பதிப்பகம் சென்றிருந்தேன். பத்ரியைச் சந்தித்தேன். நீண்ட நாள் ஆதங்கத்தைக் கேட்டுவிட்டேன். "சிறுவர்கள் புத்தகங்கள் தமிழில் வருவதில்லையே ஏன்?" என்று. பத்ரி இந்தக்கேள்வியை பலமுறை சந்தித்திருப்பார் போல. ஆயத்தங்கள் நடைபெறுகின்றன, இன்னும் சில நாட்களில் பெரிய அளவில் கிழக்கு சார்பில் வர இருக்கின்றன என்றார். பா இராகவனை அறிமுகப்படுத்தி வைத்தார். "சுரேஷ்" என்று அறிமுகப்படுத்தியவுடன், "பினாத்தலா?" என்று பா ரா கேட்டது நான் பிரபலமாகிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.
தமிழகக்கோவில்களைச் சுற்றி, ஒரு வருடத்துக்குத் தேவையான புண்ணியத்தைப் பார்சல் செய்யும் நோக்கத்தில் சிதம்பரம் (டைலமோ டைலமோ என்ற தமிழ்ப்பாடலை பிரகாரத்தில் பாடினேன், யாரும் கைது செய்யவில்லை:-)), சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவாரூர் எல்லாம் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்த போது இராமநாதனைச் சந்தித்தேன். "சந்தித்தோம்" என்பதற்கு மேல் ஒரு வார்த்தையும் சேர்க்க முடியாத வெட்டி அரட்டை! அதையும் மால் மஸாலா சேர்த்து இரண்டு ஸ்க்ரோல் பதிவாக்கி உள்ள இராமநாதனுக்கா "தெரியல"?
இடையில் தன்னைப் பார்த்திபன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு அழைப்பு வந்தது. அவருடனும், நாமக்கல் சிபியுடனும் கொஞ்சம் அளவளாவிவிட்டு வழக்கம்போல எண்ணைத் தொலைத்துவிட்டேன்.
காசியின் எண்ணைத் துப்பறிந்து கண்டுபிடித்துக் கொஞ்ச நேரம் பேசியதில் ஒரு காலத்தில் நாங்கள் இருவரும் ஒரு மரத்துப்பறவைகளாக இருந்தது தெரிய வந்தது. என்ன அவர் வேறு பிராஞ்ச், நான் வேறு பிராஞ்ச்!
பிறகு ஒரு நாலு நாள் பெங்களூர் வாசம். ஜி ராகவன் தயவில் இளவஞ்சியின் எண் கிடைக்க, ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாலும், கடைசி நேரத்தில் எதிர்பார்க்கப்பட்ட இருவர் (மோகன்தாஸ், சுதர்சன்.கோபால்) வர இயலாததால் மினி சந்திப்பாக மாற்றப்பட்டது. வளர் சிதை மாற்ற வெற்றி நாயகர் இளவஞ்சி, தேன்கூடு லிப்ட் நாயகர் கொங்கு ராசா, கவிதைப்போட்டி நடத்தும் விவசாயி இளா (போன் நம்பர் கிடைத்தவுடன் இவர் என்னுடன் பேசியது ஒரு பழைய ஜோக்கை நினைவுபடுத்தியது. நீங்க எங்கே இருக்கீங்க? அங்கேயா? நானும் அங்கேதான்! என்று ஆரம்பித்து, அடுத்த தெருவிலேயே இருக்கிறார் எனத் தெரிந்தது. ஒரு கடையில் வேட்டையாடு விளையாடு பற்றிப் பேசிக்கொண்டிருந்தவரை என் உறவினர் அறிமுகப்படுத்த, நீங்கதான் இளாவா? என்று எதிர்பார்க்க முடியாத இடத்தில் சந்திப்பு!) மற்றும் நான் - நாலே பேர். அன்றே வேலூர் செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் அரட்டை, சாப்பாட்டுக்குப் பிறகு ஜூட்.
சென்னைக்குத் திரும்பி புத்தகங்கள் வாங்க வந்த கடையில் சந்திப்பதாக பாலராஜன் கீதாவுடன் ஏற்பாடு செய்துகொண்டேன். அவரைச் சந்தித்த கையோடு புத்தகக்கடையில் சுற்றிப்பார்த்தால் கம்ப்யூட்டரில் பிளாக்கர் பக்கம் திறந்திருந்தது! யாரந்த நம்ம ஜாதிக்காரர் என்று திரும்பினால் அறிமுகப்படுத்திக்கொண்டார் பாலபாரதி. தன் நிருப அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்து கொண்டார்.
துபாய்க்குத் திரும்ப இரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே உட்லேண்ட்ஸில் இன்னும் ஒரு சந்திப்பு. ஒருங்கிணைப்பு செய்த ராம்கி ஆப்ஸண்ட். இந்த முறை பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இன்னொரு துபாய்வாசி (தொட்டடுத்து ஒரு குக்கிராமம்தான், ஆனாலும்) ராமச்சந்திரன் உஷா, ஒலிக்கும் கணங்கள் (இப்போது ஒலித்த கணங்கள் ஆகிவிட்டதே ஏன் அம்மணி?) நிர்மலா, காற்றுவெளி (எப்போதாவது அடிக்கும்!) மதுமிதா ஆகியோருடன், (பாலராஜன்) கீதா தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். ரோஸா வசந்த், ஜி ராகவன், பாலராஜன்(கீதா), மரவண்டு கணேஷ் ஆகியோருடன் நானும் சேர்ந்து பேச்சுக்களில் பெண்ணியம் தூக்கிவிடாமல் சமநிலை செய்தோம். இப்போதும் போண்டாவைப் பகிஷ்காரம் செய்தோம். எதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம் என்று ஒரு அவசர அஜெண்டா தயாரித்த என்னையே அவதூறு பேசினார்கள்! மதுமிதா எல்லோரிடம் தன் நீண்ட நாள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டார். (முக்கியமான சந்தேகம் - அலுவலக நேரத்தில் எப்படி பிளாக் பார்க்கிறீர்கள்?). ஜி ராவும் நிர்மலாவும் பெங்காலிப்படங்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்க "ஷோலே ஒரிஜினல் பெங்காலிதானே? என்று என் அறைகுறை அறிவைப் பறைசாற்றினேன். அதிர்ந்து பேசினால் யாருக்காவது வலித்து விடுமோ என்று அளந்து பேசினார் மரவண்டு கணேஷ். சந்திப்பு ஆரம்பத்தில் இருந்து என்னைக் கலாய்த்தாலும், கடைசியில் அனைவருக்கும் உணவை ஸ்பான்சர் செய்த பெருமையைத் தட்டிச் சென்றார் உஷா. பாலராஜன் பதிவிடுவதைவிட பின்னூட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துவது போலவே மற்றவர் பேசுவதைக் கவனித்து அவ்வப்போது மட்டுமே பதிலளித்தார். ரோசாவும் அமைதியாகவே இருந்தார். சந்திப்பு முடிந்தவுடன் என்னை ஆட்டோக்கள் நியாயமான கட்டணத்தில் வரக்கூடிய இடத்தில் டிராப் செய்த ரோஸாவிடம், குவாண்டம் பற்றி இன்னும் எழுதுங்களேன் என விண்ணப்பித்துக்கொண்டேன்.
பெங்களூரில் இருந்தபோது நடந்த ஒரு சந்திப்பையும், ஆகஸ்ட் 31ல் நடந்த இன்னொரு சந்திப்பையும் தவறவிட்டதில், பார்க்க நினைத்த பலரைச் சந்திக்க முடியவில்லை.
இப்படியாக, என் இந்தியப்பயணம் ஒரு முடிவுக்கு வந்து, இப்போது துபாயில் மீண்டும்.
தேன்கூடு ஜூலை, ஆகஸ்ட் போட்டிகளில் என் படைப்புகளுக்கு வாக்களித்த மக்களுக்கு என் நன்றி. இந்த முறை ஒரு புதிர் போட்டிருக்கிறேன். மறக்காமல் படியுங்கள், விடையிறுங்கள்
8 பின்னூட்டங்கள்:
ஆஹா... சென்னை வந்தாலும் வந்தீங்க..
எல்லா பதிவரையும் பாத்தாச்சா..
:-)
பினாத்தலாரே,
அடுத்த முறை இந்தியா வரும்போதாவது முன்னாடி சொல்லீட்டு (மின்மடல்) வாரும்.
எப்ப வர்றீரு எப்ப போறீருன்னு தெரிஞ்சாத்தானே...?
கோபத்துக்கு என்ன ஸ்மைலிப்பா போடுறது...
வாங்க பினாத்தலாரே..ரொம்ப ஜாலியா இருந்துட்டு வந்துஇருக்கிறீர்கள்.
லியோ சுரேஷ்
துபாய்
நன்றி பிரபு ராஜா, கோபி, லியோ சுரேஷ் (துபாயிலே எந்தப்பக்கம், 050 நம்பரை sudamini AT gmail DOT comஉக்குத் தள்ளிவிடறது).
கோபி, கோபம் எனக்குதான் வரணும். ஒரு வாரம் முன்னே நம்பர் அனுப்பச்சொல்லி போஸ்ட் போட்டு உக்காந்தா, ஒரே ஒருத்தர்தான் நம்பர் அனுப்பியிருக்கார்! இதிலே என் ஜிமெயிலே நீங்க கொடுத்ததுதான்:-()!#
இப்படி எல்லாத்தையும் கலந்துகட்டி போடலாமா கோபத்துக்கு?
ஆகமொத்தம் மொத்த தமிழ்மணத்தையும் சந்தித்திருக்கிறீர்கள்.
வெறும் முப்பத்தியாறு நாள் விடுப்பில், குடும்பத்திற்கு ஒதுக்கவே நேரம் போதாமல் பலர் திணறுகையில், நீங்கள் மட்டும் ஊருக்கு ஊர் சென்று போண்டா பஜ்ஜி மற்றும் இன்னபிற ஸ்வீட் காரத்துடன் இத்தனை பேரையும் எவ்வாறு சந்திக்க முடிந்தது என்ற கேள்வியை தமிழர்கள் கேட்கிறார்கள்!
இதற்கு தோன்றும் ஒரே பதில்: 'பெனாத்தலை' நடத்துவது ஒரு குழு. அந்தக்குழுவே கிளம்பி இந்தியா சென்று வந்திருக்கிறது. இதனை பெனாத்தலார் மறுக்க முடியுமா?
// ஆமாம், நான் ஜிப்பா அணிந்துவந்தது இட்லிவடைக்கு எப்படித் தெரியும்? //
Is it? Good Question Then. :-)
ராம்ஸ்.. என் கும்பலைத் தான் நீங்க தஞ்சாவூர்லே பாத்தீங்களே?
ஆனா, அவங்க எல்லாரும் பினாத்தறது கிடையாது!
நீங்க வேற என்னவோ சொல்றீங்க போல.. இந்த உள்குத்துக்களை பினாத்தல் குழு கவனமாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது!
பி கே யெஸ்.. இந்தக்கேள்விக்கு இட்லிவடையும் இன்னும் பதில் அளிக்கவில்லை! (அவர் பதிவிலேயே கேட்டும்)..
Post a Comment