Nov 17, 2007

எப்பவும் நீ ராஜா!

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் உபயோகித்த உறிச்சொல், "இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு!" என்பதுதான். பத்திரிக்கை விமர்சனங்களில் இதே உறி, "ஹாலிவுட் தரத்துடன் இருக்கிறது" என்று ரிபைன் ஆகும். இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதை நிறுத்திவிட்டார்களா, நான் அப்படிச் சொல்பவர்களை விட்டு விலகிவிட்டேனா தெரியவில்லை, இந்த அடைமொழி காணாமல் போய்விட்டது.

தேடி ஓடிப் போய் பார்த்த "ஹாலிவுட் தர" படங்கள் இப்போது வீட்டு வரவேற்பரையில் இலவசமாக விழும்போது மனதுக்குள் ஒரு வெட்கம் சூழ்ந்து கொள்கிறது. இதைப்போயா அவ்வளவு பாராட்டினோம் என்று.

ஆனால், "உலகத்தரம்" என்று தெரிந்திராத, கொண்டாடப்பட்டிராத ஒரு சிறுவயது ஆதர்சத்துக்கு மட்டும் இன்னும் வெட்கம் வரவில்லை. ராஜா!

லைவ் ஷோக்கள் நிறைய பார்த்ததில்லை. ஒரு முறை, சொத்தில் பாதியை அடகுவைத்து நட்சத்திரக் கலைவிழா துபாயில் நடக்கிறது என்று போனால், கண்ணுக்கெட்டாத தூரத்தில் நடிகர்கள் சொதப்பலாக ஆடிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜே கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் சிம்ரன் எங்கே தெரிந்திருக்கப்போகிறார்! டிவி திரையில் வீட்டிலேயே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு பார்த்திருக்கலாமே என்ற நினைப்பு வந்ததில் பிறகு எந்தக் கலை நிகழ்ச்சி என்றாலும் "ஆளை விடு" தான்.

ஆனால், இளையராஜா முதல்முறையாக அமீரகம் வருகிறார், அதுவும் வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு என்னும்போது மீண்டும் ஆசையும், மீண்டும் கலவரமும் ஒரே நேரத்தில் தோன்ற, ராஜா ரசிகன் வென்றான்.

ஆறரை என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஐந்தரை மணிக்கு உள்ளே நுழைந்து இடம்பிடித்து அமர்ந்தால் (குசும்பனும் லொடுக்குவும் இன்னுமே பாஸ்ட். நாலரைக்கே உள்ளே இருந்திருக்கிறார்கள்!) பொறுமையைச் சோதித்து 7 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஏழேகாலுக்கு பேச ஆரம்பித்த உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர், தனக்குத் தெரிந்த மழலைத்தமிழில், மிக அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொண்டே போக (மேடையில் அவர் சொல்கிறார்: 35000 ரசிகர்கள் கூடியிருக்கும் இந்த வேளையில், அருகே ஒரு கோபக்கார ரசிகர்: தெரியுதில்ல, 35000 பேரும் உம்மேல ஏறினா சட்னிதான் மாப்பு! இறங்குடா உடனே!), பொறுமை எல்லைக்கு வந்தது.

ஒரு வழியாக ஏழரைக்கு ஜெயராமும் குஷ்பூவும் மேடைக்கு வந்து, ஒரு அறிமுகப் பாடலோடு இளையராஜாவை வரவேற்க, அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் நேரடியாக "சிவஷக்தியாய.." என்று ஜனனி பாடலை ஆரம்பித்ததும் தொடங்கிய இசைமழை, இடைவெளியில்லாமல் 12:30 வரை புயலாய், தென்றலாய், தேனாய்க் காதில் ரீங்கரிக்க ஆரம்பித்தது!

41 பாடல்கள்! நிச்சயம் இளையராஜா ரசிகர்கள் யாரும் முழுத்திருப்தி அடைந்திருக்க முடியாது. வெளியே வரும்போது சங்கீத மேகம் என்னாச்சு, முத்துமணிமாலை இல்லையே, ரம்பம்பம் என்று ஆடவிடவில்லையே என்ற பல குரல்கள்! ஆனால்ம், இளையராஜாவின் ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களில் 41 ஐத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டமான காரியம், ஒரு வருடத்தில் வெளியான பாடல்கள், ஒரு நடிகருக்கு / இயக்குநருக்கு / தயாரிப்பாளருக்கு அளித்த பாடல்கள் என்று வைத்தாலே சுலபமாக 50ஐத் தாண்டும்.. பொதுவான தேர்ந்தெடுப்பில் சாத்தியமே இல்லை என்பதும் புரிந்திருந்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப்பாடலும் ஹிட் ஆகாத பாடல் இல்லை என்பதாலும் வருத்தமும் இல்லை!

எஸ் பி பி! எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை, 60ஐத் தாண்டியும் 20 போல குஷியும் குதூகலமுமாக, அந்திமழை மேகமாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், பாடலின் ஆதார சுருதி மாறாமல், குறையாமல் அதே நேரத்தில் மெருகும் ஏற்றி, கணீரெனப் பாடுகிறார்! கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது! நினைத்தாலே சிலிர்க்குது! என்ன ரேஞ்ச்.. வார்த்தை பிசகாமல் உணர்ச்சி மாறாமல் அவ்வளவு பெரிய பாடலில் ஒரு தடங்கலும் இல்லாமல் லைவ்-ஆக! சான்ஸே இல்லை!

சித்ரா, சாதனா சர்கம், ஷ்ரேயா கோஸல் - நேரடியாக வந்து ஒரு பிசிறில்லாமல் பாடிவிட்டு அடக்கமாகச் சென்றார்கள்! இவர்களில் டாப், என் பார்வையில் "காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஷ்ரேயா கோஸல். மூவருக்குமே ஒரு ஒற்றுமை, தமிழ் தாய்மொழி இல்லை, லிட்டில் லிட்டில் தமில்தான் தெரியும், ஆனாலும் லைவ் நிகழ்ச்சியில் உச்சரிப்புப் பிழையில்லாமல் பாடுவது என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

மீண்டும் இளையராஜா! எவ்வளவு கண்டிப்பான இசைக்காரர் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில், பாடல் முடிந்தவுடன் மட்டும் கைதட்டுங்கள், விசில் ஆட்டம் போன்றவை வேண்டாம், அளவாக அனுபவியுங்கள் என்று ரசிகர்களுக்கு அளித்த கட்டளைகளை காலப் போக்கில் தளர்த்திக் கொண்டாலும், ஒரு சிறு பிழையைக் கூட பொறுக்காமல் இசையை நிறுத்தி மறுபடி பாடுங்கள் என்று கேட்டுக்கொண்டதில் அவருடைய அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிந்தது. கடைக்கோடி ரசிகனுக்கு ஒரு வார்த்தை சரியாக எடுக்கவில்லை என்று தெரியப்போகிறதா, டெம்போ விலகியது புரியப்போகிறதா? இதுதான் பாட்டு, இவ்வளவுதான் முடியும் என்று விட்டுவிட்டால் கேள்வியா கேட்கப்போகிறான்? ம்ஹூம்.. இசை என்பது அவருக்கு ஒரு தவம். பிசகக்கூடாது, ரெக்கார்டிங் தியேட்டராக இருந்தால் என்ன, லைவ் நிகழ்ச்சியாக இருந்தால் என்ன?

குறைகளும் இருந்தன, இல்லாமல் இல்லை. அந்தக்குறைகளும் ராஜா குடும்பத்தில் இருந்தே வந்ததுதான் ஐரனி.. "இது சங்கீதத் திருநாளோ" என நன்றாகவே ஆரம்பித்த பவதாரிணி, "மயில் போல பொண்ணு ஒண்ணு"வில் தாளத்தை அடிக்கடி விட்டு சாரி கேட்டார். எதிர்பாராத(?) விருந்தினர்களான யுவன் ஷங்கர் ராஜாவும் கார்த்திக் ராஜாவும் "ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா"வை வார்த்தைகள் மாற்றிப்போட்டு பாட முயற்சித்து படு தோல்வி அடைந்தார்கள்! ஒத்திகை தேவைப்பா கண்ணுகளா! கட்டுத்தறியா இருந்தாலும் நேரடியா வந்து கவிபாட முடியாது.

வார்த்தைகள் மாற்றிப்பாடிய "சொர்க்கமே என்றாலும்"தான் சூப்பர்ஹிட்! சாதனா கூடப்பாடிய வரிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று திருப்பிப்பாடியதாகட்டும், "நம்ம ஊர்லே பண்ணமுடியற விஷயங்களை வெளிநாட்டுல பண்ண முடியாதுங்கறது ஒரிஜினல் பாட்டு, ஆனா நம்ம ஊர்லே இழக்கற விஷயங்களை ஞாபகப் படுத்தத்தான் வரிகளை மாற்றினேன்" என்று ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் சிறைக்குள் தள்ளினார் ராஜா!

ஆக, 5 மணிநேரம் ராயல் எண்டர்டெயின்மெண்ட்! மறக்கமுடியாத நிகழ்ச்சி!

32 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

என்னை வயிறு எரிஞ்சு தூங்க விடாம பண்ணிய உம்மை என்ன செஞ்சாத் தேவலாம்?

இந்த வருட வேனிற்காலத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றேன்....என்னாத்த சொல்ல.

இது எப்போ எனக்கு அமையுமோ தெரியலை!

குசும்பன் said...

இன்னும் பல விசயங்களை எதிர்பார்த்தேன்! ரொம்ப சுருக்கமாக முடித்துவிட்டீங்க.

வடுவூர் குமார் said...

SPB அதில் மட்டுமா பாக்கெட்டில் போட்டுக்கிறார்??
நேற்று கலக்கப்போவது(தொலைக்காட்சியில்) யாரிலும் அப்படியே!!
அதன் வீடியோ பதிவு கூடிய சீக்கிரம் வரும்.
அந்த ஜனனி..பாட்டு முதலாவதாகவா?
எவ்வளவு பேர் கண்ணில் நீர்?

தருமி said...

ராஜாவுக்கு 'ஜே' சொன்ன
பினாத்தலுக்கு ஜே!

SurveySan said...

(hmm. big sigh!) innum Raja pakkara opportunity kidaikkala ;(

Radha Sriram said...

எனக்கு இது வரைக்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கல....கிடைச்சா நழுவவிடகூடாதுன்னு உங்க பதிவ படிச்சப்ரம் தோணுது......

நாகை சிவா said...

பாஸ்... மொட்டை பாஸ்... என்னிக்கு பாஸ்....

ஒரு தடவையாச்சும் ராஜா இசை நிகழ்ச்சியை பாக்கனும் என்ற எண்ணம் இருக்கு பாக்கலாம் எப்பொழுது நடக்குது என்று....

அது போகட்டும்... மன்றம் வந்த தென்றலுக்கு பாட்டு இருந்துசாச்சா இல்லையா?

நான் பாடும் மெளனராகம்??

வேணாம் லிஸ்ட் போட்டா வேலைக்கு ஆவாது :)

Unknown said...

சூப்பர்ங்கண்ணோவ்.. இதே இதே அனுபவத்தை ரெண்டு வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ராஜா நேரு விளையாட்டரங்கில் நடத்தியப் போது நானும் அடைந்தேன்...அப்போ சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சார் அருமையான அனுபவம்.. ஆறரை மணிக் கச்சேரிக்கு ஐந்தரை மணிக்கே நானும் ஆஜராயிட்டோம்ல்ல... ராஜா ராஜா தான்ய்யா...

லொடுக்கு said...

ராஜா ராஜாதான்! அதில் எள்ளலவும் சந்தேகமில்லை. ஆனால், ஒரு சில தடங்கல்களால் சில நேரங்களில் சொதப்பியது போலிருந்து. அதில் ராஜாவை குறை சொல்ல முடியாது.

மிக வருத்தமானது என்னவென்றால், 'ராக்கம்மா கையத்தட்டு (நான் ஆவலுடன் கேட்க இருந்த பாடல்களில் ஒன்று) அந்த Grand Opening வயலின் பின்னனி இசையை சொதப்பியது. என்ன மாதிரியான பாடலை இப்படி சொதப்பிட்டாங்களே. :(

அப்புறம், 'சொர்க்கமே என்றாலும்' பாடலில் கண்களில் கண்ணீர் முட்டியது என்னவோ உண்மை. நம்மூரை பிரிந்திருக்கும் வலி. அது.

கோபிநாத் said...

குருவே...நான் உங்களை பார்த்தேன் (நானும் சென்ஷியும்)

இங்கையும் கொஞ்சம் வாங்க..

இசையின் ராஜா...இளையராஜா
http://gopinath-walker.blogspot.com/2007/11/blog-post_17.html

Anonymous said...

ஆஹா படிக்கும் பொழுதே நன்றாக இருக்கிறதே...இந்த நிகழ்ச்சி எந்த Channel ல் வரும் என்று தெரியுமா?

பினாத்தல் சுரேஷ் said...

ஹி ஹி கொத்தனார்.. நீர் எவ்வளவோ மேட்டர்லே பந்தா விட்டீரு.. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை :-)

குசும்பன், நீங்கள் எழுதினதையும் படிச்சேன். அரசியல்வாதி மீட்டிங் மாதிரி புகழ்ச்சிங்கறதெல்லாம் டூ மச்சு. இளையராஜாவைவிட ஏ ஆர் ஆர் பிடிச்ச ஆளுக்கு அப்படிதான் தோணும் :-)

வடுவூர் குமார்.. எல்லார் கண்ணிலும்..

அப்ப, தருமிக்கும் ஜே!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சர்வேசன், ஹி ஹி உங்களுக்கும் :-)

ராதா, தேர்ந்தெடுத்தே போனாலும், அமையறதுதான் அமையும். பாத்து போங்க :-)

நாகை சிவா, மன்றம் வந்த தென்றலுக்கு, சீனி கம் ஆல்டர்னேட் பண்ணி பாடினாங்க எஸ்பியும் ஷ்ரேயா கோஸலும். லிஸ்ட் போட்டு முடியுமா எங்க தலைவர் பெருமை.

பினாத்தல் சுரேஷ் said...

தேவ், அந்த புரோகிராமை ஜெயா டீவியிலே பாத்தேன். பரமக்குடிகாரான்னு கமலை வம்பு வலிச்சாரே அந்த ப்ரோகிராம்தானே, தூள்!

லொடுக்கு, ஆமாம். ராக்கம்மா கையத்தட்டு மெகா சொதப்பல். எஸ்பி கலக்கினாலும் பின்னணி இசை, கோர்வை எல்லாமே சொதப்பல்! வருத்தம்தான் இருந்தாலும் திருஷ்டியா நினைச்சு விட்டுடுவோம் :-)

கோபி, என்னைப் பார்த்து என்ன பிரயோஜனம்? network error-ஆ? போன் பேசியிருக்கலாமே!

நீங்க எழுதாம இருந்தா பாடல்கள் லிஸ்ட்டை தனிப்பதிவா போட்டிருப்பேன்:-( (எழுதி வச்சிருக்கொமில்ல!)

பினாத்தல் சுரேஷ் said...

அருண், கலைஞர் டிவி!

கப்பி | Kappi said...

ம்ம்...கொடுத்து வச்சவர் தல நீங்க... :)

rv said...

என் குத்தமா உன் குத்தம்மா, அம்மா சொன்னா ஆரிரரோ, என் ஆத்தா நீ, எங்கே செல்லும் இந்தப்பாதை -லாம் நேர்ல அவரோட மனதைப் பிழியும் குரல்ல பாடி கேக்கணும்னு ரொம்பபபப ஆசை.. பாடினாரா?

வடுவூர் குமார் said...

http://madavillagam.blogspot.com/2007/11/blog-post_2899.html

இங்கு இருக்கு.அந்த வீடியோ.

பினாத்தல் சுரேஷ் said...

கப்பி பய.. உங்களுக்கும் அதே பதில்தான்: ஹி ஹி.

ராம்ஸு.. உம்ம லிஸ்டுலே எதோ உள்குத்து ஸ்மெல் பண்றேனே!

நன்றி வடுவூர் குமார்.

rv said...

பெனாத்தலார்,
உம்மகிட்ட குத்துவிடற அளவுக்கு நான் பெரிய ஆளா என்ன?

ஹூம். என் பேவரிட் பாட்டுகளத்தான் பாடலை. போனாப்போவுது. இதெல்லாம் நேர்ல கேக்காம நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க.

அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர். எத்தன லட்சம் வயலின் சேர்ந்து மெலடிய புழிஞ்சாங்க, எத்தன ஆயிரம் பேரு தபலா தப்பட்டை தட்டினாங்கன்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.

பினாத்தல் சுரேஷ் said...

//எத்தன லட்சம் வயலின் சேர்ந்து மெலடிய புழிஞ்சாங்க, எத்தன ஆயிரம் பேரு தபலா தப்பட்டை தட்டினாங்க//

ம்ஹூம்.. ஒண்ணும் சரியில்ல.. நீ கலவரம் பண்ணன்னே வந்திருக்கே..

ஆடுமாடு said...

பினாத்தல் நல்லா அனுபவிச்சிருக்கீங்க. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியது கலைஞர் டி.வி. நாங்க வெயிட் பண்றோம். என்னைக்காவது தூங்கலாம்னு நினைக்கிற ஞாயிற்றுக்கிழமையில இதை ஒளிப்பரப்பு பண்ணி தூங்கவிடாம பண்ணுவாங்க. ராஜாவுக்காக அதை கூட பண்ணாட்டா எப்படி?

இரண்டாம் சாணக்கியன் said...

பினாத்தலாரே.. அப்படீன்னா அப்ப நீங்க குடியிருக்குற வீடு துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கத்துல இருக்கு கரெக்ட்டா..

"சுரேஷ்
C/o.பினாத்தல் சுரேஷ்
துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில்
துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம்
துபாய்"

இப்படின்னு போஸ்ட் அனுப்பினா கைல சிக்கிரும்ல.. தேங்க்ஸ்..

பினாத்தல் சுரேஷ் said...

ஆடுமாடு,

//ராஜாவுக்காக அதை கூட பண்ணாட்டா எப்படி?//

அதானே!

இரண்டாம் சாணக்கியன்,

ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க :-)

இலவசக்கொத்தனார் said...

என்னாத்த ஷார்ப்பு?

துபாய் ஸ்டேடியமா ஷார்ஜா ஸ்டேடியமா? இல்லை அதுதாங்க இதுன்னு விளையாட்டா? இல்லை துபாயி, சார்சா, அபிதாபி எல்லாம் ஒண்ணுதான்யான்னு ஒரு கதையா?

என்னா விளையாட்டு விளையாடறீங்க....

Anonymous said...

ஹலோ சார்..

//எஸ் பி பி! எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை, 60ஐத் தாண்டியும் 20 போல குஷியும் குதூகலமுமாக, அந்திமழை மேகமாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், பாடலின் ஆதார சுருதி மாறாமல், குறையாமல் அதே நேரத்தில் மெருகும் ஏற்றி, கணீரெனப் பாடுகிறார்! கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது! நினைத்தாலே சிலிர்க்குது! என்ன ரேஞ்ச்.. வார்த்தை பிசகாமல் உணர்ச்சி மாறாமல் அவ்வளவு பெரிய பாடலில் ஒரு தடங்கலும் இல்லாமல் லைவ்-ஆக! சான்ஸே இல்லை! //

சுப்பர்ப் சார் அருமை அருமை.. ஹி.. ஹி.. ஹி...

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு,

துபாய் ஸ்டேடியத்துக்குத்தான் வந்து தேடிப்பாத்துட்டுப் போறாரு.. ஷார்ஜா ஸ்டேடியம் ரொம்ப தூரம் ஒண்ணும் இல்லைன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆட்டோவோட வந்தா அட்ரஸ் கைலே இல்லாம இருக்கறது நல்லதுதானே?

நன்றி கோவை ரவி.. (எதிர்பார்த்தேன் உங்களை:-))

தங்ஸ் said...

ஜானகியம்மா ஏன் இளையராஜா நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லைன்னு புரியல..எனக்கு பயங்கர வருத்தம்..

Anonymous said...

Photos?...pls
-kajan

கார்த்திக் பிரபு said...

good post sir

Ambur Edwin said...

Hi Friend! You are very lucky to attend such programme. hats off to Raaja sir.
- Edwin.
Liverpool

Ambur Edwin said...

Thats Good.
You are really Lucky. Once I had an oppertunity to attend a programme by Raaja, MSV,KVM & Shankar Ganesh together in Kovai (1987)
Hats off to Raaja.

 

blogger templates | Make Money Online