முன் குறிப்பு: தியேட்டர்லே வந்தபோது தவறவிட்டு, ஒரிஜினல் பிரிண்டுக்காக வெயிட்டி வெயிட்டி கிடைக்காமல் கடைசியா ஒரு திராபை பிரிண்டுல பார்க்கவேண்டி வந்தது. ஹீரோயின் அழுதுகிட்டே வசனம் பேசின காட்சிகள், ஹீரோ பேக்கிரவுண்ட் ம்யூசிக்கோட பேசற காட்சிகள் எல்லாத்துலயும் க்ரிப்டோகிராபி உபயோகப் படுத்தி அர்த்தம் புரிஞ்சிக்க வேண்டி வந்தது.
நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருக்கு: நல்ல ஆழமான வசனங்கள், காட்சிப்படுத்தல்கள், கவிதையான ஏழு வயதுச் சிறுவர்களின் நட்பு, தமிழய்யா வார்டன் (அழகம்பெருமாள்) பாத்திரப்படைப்பு, நாயகன் நாயகி நடிப்பு, நாயகன் வாயிலாகவே கதைசொல்வதால் அவன் கண்ணாகவே ஓடும் காமரா, வேல் மாதிரி mediocre படங்களுக்கு mediocre ஆகவும், இது போன்ற படங்களுக்கு வேறு அளவுகோலும் வைத்து இசையமைத்திருக்கும் யுவனின் அற்புதமான இசை, பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்பு, தற்கொலைக்குப் பின் நண்பர்கள்(?) எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற முன்கூட்டிய கற்பனை, அங்கங்கே தெறிக்கும் தமிழ் ஆங்கில கவிதை எடுத்தாளல்கள் .. சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், முழுமையாக நல்ல படம் என்று முத்திரைப்படுத்தவிடாமல் செய்யும் விஷயங்களையும் பட்டியலிடலாம்.
தமிழ் கற்றதால்தானா பிரபாகருக்கு இந்த நிலைமை? சந்தையில் அதிகவிலை பெறாத BA History போன்ற ஒரு பாடத்தை எடுத்திருந்தாலும் இந்த நிலைமை வந்திருக்கலாமே! பிரபாகர் ஒரு கிராமத்து ஆசாமி என்பதால் (கல்சர் சரியில்லை என்னும் நாமக்காரன்) ஒதுக்கப்படுகிறானா, பணம் இல்லை என்பதால் (200 ரூபாய் பைன் கட்ட கையில் இல்லை) ஒதுக்கப்படுகிறானா, உறவுகள் இறந்ததால் தனிமை வசப்படுகிறானா, 27 வயதிலும் பாலியல் தேவைகள் பூர்த்தி ஆகாததால் மனம் பிறழ்கிறானா -- என்று பல கோணங்களில் ஆராய வகை செய்யும் பாத்திரப் படைப்பு. தமிழ் என்பது வசனத்துக்காக மட்டும் (2000 வருஷத் தமிழுக்கு 2000, 25 வருஷ கம்ப்யூட்ட்டருக்கு 2 லட்சமா?) உபயோகப்படுகிறதே அன்றி, கதைக்கு எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை. தமிழய்யாவைப் பிடித்திருந்ததால் தமிழ் படித்ததாகச் சொல்கிறானே ஒழிய, தமிழ் பிடித்ததால் படித்ததாகச் சொல்லவில்லை. போலீஸ் பிடித்துக் கொண்டு செல்வதற்கும் சிகரெட்தான் காரணமே ஒழிய தமிழ் காரணமில்லை.. தமிழை உணர்ச்சிப் பொருளாக்குவது தவிர, தமிழுக்கும் இந்தப்படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. (பிரபாகரா.. விவகாரமான பேரு என்று வரும் வசனமும் இன்னும் ஒரு சாராரை மகிழ்ச்சிப்படுத்தச் சேர்த்ததே என்றும் நினைக்கிறேன்.)
Income Inequality, Economic divide என்பவை, தற்போது பேசியே ஆகவேண்டிய பிரச்சினைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. நாராயணன் 7 ட்ரெயிலர் ஓட்டிவிட்டார், எப்போது மெயின் ரீலுக்கு வரப்போகிறார் என்பது தெரியவில்லை, ஆனால் அவர் ட்ரெயிலர்களிலேயே யோசிக்கவேண்டிய பலவிஷயங்களை முன்வைத்திருக்கிறார். பெரிய பிரச்சினை ஆகும் முன் தவிர்க்க, இது ஒரு பிரச்சினை என்று அங்கீகரிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் தீர்வை நோக்கிச்செல்ல முடியும், அதைத்தான் நான் இங்கும் சொல்லி இருக்கிறேன்.
இந்தப்படத்தைப் பார்க்காமலே நான் சொன்ன கருத்து: "கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன்.
இந்தக் கருத்திலிருந்து, படம் பார்த்தபின்னும் மாற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு பிட்ஸாவுக்காகக் கூட நாளை கொலை நடக்கலாம் என்று கூறும் இயக்குநர், அந்தக் கொலைகளையும், மனப்பிறழ்வையும் நியாயப்படுத்தும் வசனங்களையும் வைத்து ஒருபக்கம் ஓடிவிட்டார். கருணாஸ் சொல்லும் "பக்கத்து வீட்டுக்காரன் அதிகமா சம்பாதிக்கிறான், அந்த வயித்தெரிச்சல்லே அவன் ஸ்கூட்டரைப் பஞ்சர் பண்ணுவேன், அதைவிட கொஞ்சம் அதிகமா நீங்க செஞ்சிருக்கீங்க" என்பதும், தொலைக்காட்சியில் பேட்டிக்குப் பின் வரும் வசனங்களும் (வாடகை எல்லாம் சாப்ட்வேர்காரங்களாலத்த்தான் அதிகமாச்சு, ஒரு இடத்துல மட்டும் வளந்தா அது வளர்ச்சியில்ல, வீக்கம்) கோபப்படுவது தார்மீக உரிமை, ஸ்கூட்டரைப் பஞ்சர் செய்வதும் கொலை செய்வதும் தவிர்க்க இயலாத வெளிப்பாடுகள் போன்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன.
மிதக்கும் வெளி சொல்வதுபோல மாற்றுக்கருத்துக்கும் இடம் ஒதுக்கினாலும், இயக்குநர் செய்யவிரும்பும் கட்டமைப்பு தெளிவாகத் தெரிகிறது. (ஷங்கர் படங்களில் மாற்றுக்கருத்து வருவதில்லையா? முதல்வன் படத்தில் எல்லாரும் அடுத்த முதல்வராக புகழேந்தியைச் சொல்ல, ஒரு குரல் எம்ஜியார் என்று சொல்லியதே? சிவாஜியை எல்லாரும் புகழ, ஹனிபா "அவன் ஜெயிலிலேயே இருக்கணும்" என்று சொல்லவில்லையா? -- ஆனால் ஷங்கர் சொல்லவிரும்புவது பெரும்பான்மை மூலம் தெரிகிறது, இங்கேயும் அப்படியே!)
இங்கே பயமுறுத்துவது, நாயகன் கொலை செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் - செல்லாத ரூபாய் நோட்டை ஒத்துக்கொள்ளாத ரெயில்வே ஊழியன், பீச்சில் காதலிக்கும் ஜோடி, உதவ முயலும் சைக்கியாஸ்டிரிஸ்ட் என தங்கள் அளவில் தவறுசெய்யாத சாதாரணர்கள். வில்லன்களாகச் சித்தரிக்கப் படுபவர்கள் ராத்திரி முழுக்க வேலை செய்து வீடு திரும்பும் BPO ஊழியன், 2 லட்சம் சம்பளம் வாங்கியும், கல்சர் சரியில்லாத (என அவன் நினைக்கும்) நண்பனை அலுவலகத்துக்கு அழைத்து உபசரிக்கும் சாப்ட்வேர் ஊழியன், வசனம் எழுதப்பட்ட டி ஷர்ட் அணிந்த பெண் - அவர்கள் அளவில் எந்தத் தவறும் செய்யாதவர்கள்தான்.
எதற்கென்றே தெரியாமல் காழ்ப்புணர்ச்சி காட்டும் போலீஸ்காரனும், லஞ்சம் வாங்க முயலும் ரயில்வே போலீஸும் வில்லன்களாகச் சித்தரிக்கப் படுவதையாவது ஓரளவு ஏற்கலாம். இப்படிக் கொலைகள் செய்யும் ஒருவனை Income Inequality என்ற ஒரே காரணத்திற்காக நியாயப் படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
ஒரு சைக்கோ, கொலை செய்தான் செத்தான் என்ற அளவில் கதை நின்றிருந்தால் இதைப் பற்றிப் பேசவேண்டியிருக்காது. ஆனால், அவன் சைக்கோ ஆனதுக்குக் காரணம் இவை என நியாயப்படுத்த முயலும்போது - அதுவும் தமிழ் என்ற ever-boiling உணர்ச்சியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அதிக சம்பளம் வாங்கும், பணம் உள்ள, பெண்துணை கொண்ட அனைவரும் வில்லன்கள் என்று சொல்ல வருவது அநீதி.
யோசிக்க வைத்த படம் என்பது சரிதான், ஆனால் படத்தின் அடிநாதம் சரியில்லை. Dangerous Movie.
23 பின்னூட்டங்கள்:
dangerous movie??
avvvv
my goodness naan innum paakkalai.
பெனாத்தலாரே, இந்தப்படத்தை நான் இனூம் பார்க்கவில்லை.ஆனால் சில எண்ணங்கள்.
கற்றது b.a.history ஆனாலும் இண்த கஷ்ட்டம் இருக்கும். ஆனாலும் ப்ரச்சினை என்னவென்றால், மொழியை உணர்ச்சி பூர்வமாக ஆக்கிவிட்டு அதில் குளிர் காயும் அரசியல் தான். அரசியல் வாதிகளின் குழந்தைகள் யாருமே தமிழ்வழிப் பயிற்ச்சியில் கற்க்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்து மிகவும் ஏழயானோர் தமிழ் மட்டும் படித்துவிட்டு வேலை கிடக்காமல் படும் பாடு சொல்ல முடியாது.ஒன்றும் இல்லை 'எல்லாரும் தமிழ் படிக்கவேண்டும்' பள்ளிகள் எல்லாம் தமிழ் மயம் ஆக்கப்படும் என்றெல்லம் சொல்லாமல் இருக்கலாம்.
கர்னாடகாவில் சமீபத்தில்(மெய்யாலுமே சமீபம்)பொது மக்கள் பொது ஜன வழக்கொன்றை இட்டதாக கேள்விப்பட்டேன். அரசாங்க உதவி உள்ள பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்ககூடாது என்று அரசு முடிவு செய்தபோது மக்களுடய் கேள்வியும் எதர்காக அவர்கள் குழந்தைகள் மட்டும் எதிர்காலத்தில் கஷ்ட்டபடவேண்டுமென்பதுதான்.
என்னிடத்தில் உடனடி referrence இல்லை.
பேசி பேசி சலிச்சு போச்சு...
ஆக மொத்தத்தில் இந்த படம் நான் பாக்க போவது இல்லை.. அம்புட்டு தான்
படம் பாக்குறதுக்கு முன்னாடி ஒரு பதிவு, பார்த்த பின் ஒரு பதிவு. அவனவன் பதிவுக்கு மேட்டர் இல்லாம அலையும் போது உம்ம டெக்னிக் புல்லரிக்குதய்யா. :))
மங்களூர் சிவா,
பாத்தா தப்பில்லை:-)
சீதா, தமிழை உணர்ச்சிப் பண்டமா திட்டம் போட்டே ஆக்கறாங்க :-(
நாகை சிவா.. அது உங்க இஷ்டம் :-)
கொத்ஸ் :-)) டெக்னிக் கத்துக்கறது மட்டுமில்லாம குருதட்சிணை கொடுக்காம ஏமாத்துறீர் வேற!
நல்ல பதிவு சுரேஷ்.
தமிழ் விலை பொருள் ஆக்கும் அரசியல் வாதி போல் படம் எடுத்து இருக்கிறார் Director என நினைக்கிறேன் (நானும் இன்னும் படம் பார்க்கவில்லை).
Lets see what kind of impact it has...இதை தொடர்ந்து இதே போல் படங்கள் வந்து அதுவும் வெற்றி பெற்றால் அது தன் இந்த படம் ஏற்படுத்திய மிக பெரிய பாதிப்பாக இருக்கும்.
படத்தின் அடிநாதம் சரியில்லை. Dangerous Movie//மிகவும் சரி...
நான் இன்னும் படம் பாக்கலை - நெரெய விமர்சனம் வந்தாச்சு - பாத்துட்டு எழுதுறேன்
அதிகம் படிப்பறிவு இல்லாதவன் இந்த மாதிரி கதைகளை படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும். இந்த ஆளுக்கு per annum சம்பளத்திற்கும் per month சம்பளத்திற்குமே வித்தியாசம் தெரியவில்லை. படத்திற்காக home work செய்யவேயில்லை. படம் எடுப்பதற்கு முன் தொழில் துறை,கணினி துறை,மேலாண்மை துறை அலுவல்கள், என்ன நடக்கிறது இத்துறைகளில் என அனைத்தையும் ஹோம் வொர்க் செய்திருக்க வேண்டும். பத்து லத்தீன் அமெரிக்க படங்கள் பத்து பிரெஞ்சு படங்கள் பார்த்து விட்டு அதே போல் frames வைத்து படம் எடுத்தால் இவங்களுக்கு ஒலக தரம் வாய்ந்த படம் எடுத்து விட்டதா நினைப்பு. எதோ ஒரு டைரக்டர் இதை ஆசியா வின் ஐந்து சிறந்த படங்களில் ஒன்று ன்னு சொன்னாரே ? அவரை தேடி உதைக்கணும்
இந்த வார ஆ.வீ. பாருங்கள். தமிழச்சி என்ற கவிஞர் உண்மை ப்பெயர் சுமதி ஆனால் தமிழின் மேல் உள்ள பிரியத்தால் பெயர் மாற்றம் செய்துகொண்டுவிடார்.அப்புறம் தெரிகிறது இவர் வேலை செய்தது ஆங்கில விரிவுரையாளராக.இவருடய பெயர் மாற்றத்தினை எத்தனை பேர் நம்பினார்களோ?எனக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது..நான் சந்தித்த உண்மையான தமிழ் பி.ஏ.க்களை நினைத்து.
அருண், நன்றி. படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பது தெரியவில்லை. ஓரளவேனும் வெற்றி என்றால் ஈசல்களாக இன்னும் 5-6 படங்களுக்கு பூஜை போட்டிருப்பார்கள்.
ஜெசிலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சீனா, பொறுமையா வாங்க :-)
வைத்தி, கோவமா இருக்கீங்க போல.. நான் அந்த அளவுக்கு டைரக்டரைத் திட்ட மாட்டேன் :-)
உண்மை சீதா. தமிழ் என்று சொல்லிவிட்டால் மேல் கேள்வி கேட்கக்கூடாது என்ற கலாச்சாரத்தை குஷ்பு மேட்டரின்போதே பார்த்தோமே!
//அருண் said...
இதை தொடர்ந்து இதே போல் படங்கள் வந்து அதுவும் வெற்றி பெற்றால் அது தன் இந்த படம் ஏற்படுத்திய மிக பெரிய பாதிப்பாக இருக்கும்.// அருண்...!! விஜய் போன்ற நடிகர்கள் நடித்து வரும் மசாலா படங்களை விட இது போல் வரும் சில வித்தியாசமான படங்கள் வரவேற்கத்தக்கதே......
//Dangerous Movie.// சினிமாவை சினிமாவாக பாருங்கள் அதனை வாழ்க்கையாக பார்க்கும் போது அதில் வருவது போல் கொலை செய்ய உங்களுக்கும் தோன்றும்....
//வைத்தி said...
அதிகம் படிப்பறிவு இல்லாதவன் இந்த மாதிரி கதைகளை படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும். இந்த ஆளுக்கு per annum சம்பளத்திற்கும் per month சம்பளத்திற்குமே வித்தியாசம் தெரியவில்லை. படத்திற்காக home work செய்யவேயில்லை. படம் எடுப்பதற்கு முன் தொழில் துறை,கணினி துறை,மேலாண்மை துறை அலுவல்கள், என்ன நடக்கிறது இத்துறைகளில் என அனைத்தையும் ஹோம் வொர்க் செய்திருக்க வேண்டும். பத்து லத்தீன் அமெரிக்க படங்கள் பத்து பிரெஞ்சு படங்கள் பார்த்து விட்டு அதே போல் frames வைத்து படம் எடுத்தால் இவங்களுக்கு ஒலக தரம் வாய்ந்த படம் எடுத்து விட்டதா நினைப்பு. எதோ ஒரு டைரக்டர் இதை ஆசியா வின் ஐந்து சிறந்த படங்களில் ஒன்று ன்னு சொன்னாரே ? அவரை தேடி உதைக்கணும்//
அண்ணே வணக்கம் நீங்க உலக மகா இயக்குனரா?? எத்தனை படம் இயக்கி இருக்கிறீர்கள்?? no one can be perfect... நீங்கள் படம் இயக்கவேண்டி வந்தாலும் நீங்களும் பிழை விடுவீர்கள்..... இந்த மாதிரி கொஞ்சம் நல்லா இருக்கிற படத்தையும் கொஞ்சம் நல்லா இயக்குனர்களையும் வாழ விடாதீர்கள்.... தமிழ்த்தவளைதான் நீங்களும்..... முன்னேறவிடமாட்டீர்கள்..... விஜய், அஜித் போன்ற குப்பைகளை வளர விடுங்கள்..... அவர்கள் தமிழ் சினிமாவை வாழவைப்பார்கள்
அன்பு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Dangerous Movie - எனக்கல்ல. ஒரு புது பிரச்சினையைப் பற்றி பேசும் படம், ஒரு பக்க நிலைப்பாட்டுடன் பேசுவதும், சாப்ட்வேரால்தான் விலையேற்றம் என்ற பொதுப்புத்தியை எக்ஸ்ப்லாய்ட் செய்வதும், கொலைவரை சென்ற நாயகனை நியாயப் படுத்துவதும் - ஏற்கனவே காண்டில் இருக்கும் Vulnerable மக்களை குஷிப்படுத்தும். (அவர்களும் கொலைசெய்யப் போவார்கள் என நான் நினைக்கவில்லை, அப்படி இருந்தால் இந்தியனுக்கப்புறம் இந்தியாவில் லஞ்சம் இருந்திருக்காது, முன்னாபாய்க்குப்பிறகு அகிம்சை ஆளத்தொடங்கி இருக்கும்:-)) இயக்குநரின் நோக்கமும் அஃதே என நான் கருதுவதால் Dangerous.
மற்ற கேள்விகளுக்கு நீங்கள் கேட்டிருப்பவர்கள் பார்க்கும்போது பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.
//anbu said...
அண்ணே வணக்கம் நீங்க உலக மகா இயக்குனரா?? எத்தனை படம் இயக்கி இருக்கிறீர்கள்?? no one can be perfect... நீங்கள் படம் இயக்கவேண்டி வந்தாலும் நீங்களும் பிழை விடுவீர்கள்//
அன்பு தம்பி ... விமர்சனம் செய்ய படம் இயக்கியிருக்க அவசியம் இல்லை.படத்தில் பிழை இருக்கலாம். படமே பிழையாய் இருக்கக்கூடாது. விஜய் அஜித் போன்ற குப்பைகள் போலவே இது போன்ற குப்பைகளையும் வளர விடக்கூடாது. He is sick. பெனாத்தலாரின் கருத்துப்படி இது ஒரு Dangereous movie.
நண்பர் Anbu,
விஜய், அஜித் நடிக்கும் மசாலா படங்கள் காளான்கள் போன்றவை. அவை குப்பை என்று பார்பவர்களுக்கு தெளிவாக தெரியும். Those films are just for entertainment sake. ஆனால் இதே போல் கருத்து சொல்கிறேன் என்று சொல்லி சரியான விவரங்களை கொடுக்காமலும் ஒரு தலை பட்சமாக படம் எடுப்பது மிக ஆபத்து. இது வயலில் விளைந்த களை.
சுரேஷ்,
சும்மா படித்து கொண்டு ஒரமாய் இருந்திருந்த என்னை வேறு ட்ரைய்லர் ஒட்டுகிறான் பேர்வழி என்று உள்குத்தில் இழுத்து விட்டீர்கள் ;) பிரச்சனையில்லை. நீங்கள் எழுதிய விமர்சனம், உங்களின் விமர்சனம், இதில் நான் உள்நுழைய முடியாது. இந்த படம் முன்னிலைப்படுத்தும் பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் மிகக் குறைவாகவும், இந்த படத்தின் அரசியலையும், இயக்குநரின் அறிவுஜீவி/அறிவின்மை தனத்தையும் முன்வைத்தே எழுப்பப்படுகின்றன. எனக்கென்னவோ, காக்க காக்க, என்னை கொஞ்சம் மாற்றி பாடலில் வண்டியோட்டும் சூர்யா, பெப்சி கேனை குடித்து விட்டு சாலையில் வீசி எறிவார், அதை ஒரு பிரச்சனையாக மாற்றி, "இவ்ளோ கரெக்டான ஆபிசர் ரோட்டுல குப்பை போடலாமா' என எதிர்வாதம் புரிந்து தத்தம் புத்திசாலித்தனத்தினை நிர்ணயித்துக் கொள்ளும் அபத்தமாக தான் நிறைய விஷயங்கள் எழுகிறது.
இது தமிழ் சினிமா. அதை முதலில் புரிந்து கொள்வோம். எல்லா தமிழ் சினிமாவிலும் இருக்கக்கூடிய அபத்தங்களும், கவனக்குறைவுகளும், பிரச்சனைகளும் இந்த படத்திலும் இருக்கின்றன. 'நீ நெஜமாவா சொல்றே" என ஆனந்தி ஒவ்வொரு தளத்திலும் கேட்கும் போது, அக்கேள்வி ஒரு சாரருக்கு மிக அபத்தமாகவும், ஒரு சாரருக்கு மிக கவித்துவமாகவும் தெரிகிறது. பருத்தி வீரன், கற்றது தமிழ், பொல்லாதவன் என நீளும் படங்களில் தமிழ் சினிமாவின் சாயங்கள் இல்லாமல் பார்க்க முடியாது. ஆனால், எண்ட்ரி சாங், குத்து பாட்டு, கேமரா பார்த்து வசனங்கள், இரட்டை அர்த்த நகைச்சுவை, கதாநாயகியின் தொப்புள், இடுப்பு, கிளிவேஜ், பிட்டங்கள் [கேட்டால் B & Cல தியேட்டர்ல உட்கார மாட்டாங்க சார் என டிஸ்டிரிப்புயடர்களின் நச்சரிப்பு என்கிற சாக்கு] என பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே ஒரளவுக்கு அடிப்படை பிரச்சனைகளையும், சமூக தளத்தின் அருகிலிருக்கும் பல்வேறு undercurrent விஷயங்களையும் இந்த படங்கள் பேசுகின்றன என்கிற போது அதை உதாசீன படுத்தி விட முயலாது.
இதை டேஞ்சரஸ் மூவி என்று வகைப்பிரித்தல் என்ன அவசியம் என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கொலை தான் முடிவு என்று சொல்லும், அன்னியன் / இந்தியன் / சமுராய் வகை படங்களுக்கும், கற்றது தமிழுக்குமான இடைவெளியில் தான் பிரச்சனை இருக்கிறது. வன்முறை என்பது உள்ளீடாக இருப்பது. அதை வெளிப்படுத்தும் வெளிகள் இருப்பின் நீங்களும் நானும் கூட வன்முறையின்பால் உள்ளாவோம் என்பது தான் உண்மை. மற்ற படி, இந்த படத்தின் பிரச்சனைகளை தனியாக விவாதிக்கலாம், குமுதத்தில் பாமரன் எழுதியிருக்கும் "படித்ததும், கிழித்ததும்" போல அல்லாமல் ;)
நாராயணன்,
நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.
// ஒரளவுக்கு அடிப்படை பிரச்சனைகளையும், சமூக தளத்தின் அருகிலிருக்கும் பல்வேறு undercurrent விஷயங்களையும் இந்த படங்கள் பேசுகின்றன என்கிற போது அதை உதாசீன படுத்தி விட முயலாது//
வாஸ்தவம். ஆனால் சைக்கோ மூலம் பேசுவது, தமிழ்- ஐத் துணைக்கழைத்தது போன்ற விவகாரங்கள் இயக்குநருக்கு அழுத்தமாகச் சொல்லத் துணிவில்லை எனத்தோன்றவைக்கிறது (பெப்ஸிகேன் அளவுக்கான விமர்சனம் இல்லை என நினைக்கிறேன்)
வருமான வித்தியாசங்கள் நாயகனை சைக்கோ ஆக்குவதாக தெளிவாகக் காட்டவில்லை. உண்மையில் நாயகனுக்கு என்னதான் பிரச்சினை என்பதே புரியவில்லை. 27 வயதுவரை மறுக்கப்பட்ட செக்ஸா, தமிழுக்கு நாட்டில் உள்ள மரியாதைக்குறைவா, பணப்பற்றாக்குறையா - எதிலும் தெளிவில்லை. ஆனால் முடிக்கும்போது மட்டும் சம்பளவித்தியாசங்களைப் பற்றி 10 நிமிஷம் பேசிவிட்டு, அதை வைத்து ஒரு கருத்தாக்கமும் செய்ய முனைந்திருப்பது - இந்த போலித்தனத்தை, ஏற்கனவே உள்ள Rift ஐ exploit செய்ய விரும்புவதைத்தான் dangerous எனக்கருதுகிறேன்.
வைத்தி & அருண், நன்றி.
Narain,
//காக்க காக்க, என்னை கொஞ்சம் மாற்றி பாடலில் வண்டியோட்டும் சூர்யா, பெப்சி கேனை குடித்து விட்டு சாலையில் வீசி எறிவார், அதை ஒரு பிரச்சனையாக மாற்றி, "இவ்ளோ கரெக்டான ஆபிசர் ரோட்டுல குப்பை போடலாமா' என எதிர்வாதம் புரிந்து தத்தம் புத்திசாலித்தனத்தினை நிர்ணயித்துக் கொள்ளும் அபத்தமாக தான் நிறைய விஷயங்கள் எழுகிறது.//
ஆனால் அதே காக்க காக்க படத்தில் வன்முறை அதிகம், un parliamentary words அதிகம் என்று விமர்சனம் செய்தால் அது ஓர் அளவிற்கு உண்மை தானே. அதே போல் இங்கு யாரும் ஜீவா வின் தாடி சரி இல்லை என்று விமர்சனம் செய்யவில்லை. படத்தில் சொல்லபட்ட கருத்தும், அது ஏற்படுத்தும் தவறான விளைவுகளும் தான் விமர்சனம் செய்ய படுகின்றன. ஒரு படம் வித்யாசமான முறையில் எடுக்க பட்டதால் அதை விமர்சனம் செய்யக்கூடாது என்றில்லை.
அருமையான விமரிசனம், என்றாலும் இதைப் படிக்கும் முன்னாலேயே இந்தப் படம் பார்க்கவேணாம்னு நான் முடிவெடுத்துட்டேன். ரொம்பநாளுக்கப்புறம் ஒரு உருப்படியான பதிவு படிச்சேன், நன்றி.
அப்புறம் சீதாவின் கருத்துக்களை முழு மனதோடு ஆமோதிக்கிறேன்.
சுரேஷ்,
இந்த படத்தில் இடறல்கள் இருக்கின்றன என்பது உண்மை. எல்லா தமிழ்சினிமாக்களிலும் இருக்கக்கூடிய பிரச்சனையது. முதலிலிருந்து படத்தினை நீங்கள் இன்னொரு ரவுண்டு பார்த்தால், ஒரு சாதாரண இளைஞனை சமூகமும், அதன் மாறி வரும் மாற்றங்களும் எந்தளவிற்கு கொண்டு செல்கிறது என்பது பற்றிய விரிவான விவரணை தான் படமுழுக்க. இதில் மறுக்கப்பட்ட செக்ஸ், பணப்பற்றாக்குறை என நாம் பிரச்சனையினை குறுகி விவாதிப்பதை விட்டு விடுவோம். சமூகமே ஒரு குழப்பமான, சற்றும் தெளிவில்லாத நிலையில்தான் இருக்கிறது, அப்படியிருக்கையில், அப்பேர்பட்ட ஒரு சமூகத்தின் சீற்றங்களினால் பாதிக்கப்படும் ஒருவன் எப்படி நிதானமாக பொறுமையாக காட்ட முடியும் என்பது புரியவில்லை.
இல்லை முடிக்கும்போது பேசும் 10 நிமிட சம்பள வித்தியாசமென்பது தமிழ்சினிமா கிளைமேக்ஸ்.ஆனால் எப்படி இதை போலித்தனம் என்று சொல்வீர்கள். திருவண்ணாமலையில் கிரிவலத்தில் கஞ்சா அடித்துக் கொண்டு இருக்கும் சாமியார்கள், எச்சில் கிளாஸில் இல்லாமல் பிளாஸ்டிக் கோப்பையில் டாஸ்மாக்கில் குடிக்கும் 'மாலை" போட்ட சாமிகள், ஒன்றயணா வட்டச்செயலாளர் போஸ்ட்டுக்கு அண்ணாசாலையில் கட்-அவுட் வைத்துக் கொள்ளும் விற்பனர்கள், சூடமேற்றும் ரசிக சிகாமணிகள், சிலை உடைப்பினையே உருவ வழிப்பாடு / கடவுளை உருவகப்படுத்துல் என்கிற காரணிகளால் முன்வைத்த பெரியாருக்கே சிலை வைத்து மாலை போட்டு கும்பிட்டு, எங்கேயாவது சிலை உடைந்தால் கொந்தளிக்கும் பகுத்தறிவுவாதிகள், நன்றாக கொள்ளையடித்து விட்டு, அதில் கடவுளுக்கே திருப்பதியில் ஒரு குறிப்பிட்ட பர்சண்டேஜினை குடுக்கும் பணக்காரார்கள், கம்ப்யுட்டர் படிச்சா பசங்க தேறிடுவாங்க என வாழ்ந்து கொண்டிருக்கு மத்யம குடும்பங்கள் என களேபாரமாக தானிருக்கிறது தமிழ்நாடு. இப்படிப்பட்ட ஒரு நிலையில், மனிதமும், தொடர் கோபமும் உடைய எவரும் சைக்கோ வாவது மிக நிச்சயம். நீங்களும், நானும், இன்ன பிற பின்னூட்டம் போடும் நண்பர்களும், இதை தலைக்கு மேல் கொண்டு செல்லாமல், தத்தம் individual life பார்ப்பதனால் தான் இன்னமும் சைக்கோவாகாமல் இருக்கிறோம். அப்படியிருப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு மனிதன் சொல்லும் கருத்துகளின் பின்னாடியில் பல சுய பிரச்சனைகள் இருந்தாலும், அவன் பொதுவாய் சொல்லும் ஒரு விஷயத்தில் இருக்கும் நேர்மையும், ஈரமும், ஆழமும் படத்தினை தாண்டி யோசிக்க வைக்கின்றன. பொத்தாம் பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டு, எல்லாவற்றுக்கும் நாம் justifications கேட்பது, அல்லது, நாமே நமக்கான justifications போட்டு விட்டு போவது. இதனாலெல்லாம், இது புனித காவியம், ஆசியாவின் தலைச்சிறந்த படம் என்பதெல்லாம் ஜல்லியடிக்கவில்லை. மற்ற படி எல்லாவற்றையும் இயக்குநர் நேரடியாக சொல்லவேண்டும் என்று சொன்னால் தமிழ் சினிமாவிற்கும் கோனார் உரைக்கும் பெரிய வித்தியாசங்களிருக்காது. சினிமா இன்றைக்கு ஒரு வினையூக்கி ஊடகமாக தான் பார்த்தல் வேண்டும். Faranheit 9/11 விவரணப்படத்தில் 9/11 பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்காது. ஆனால், அது ஒரு தூண்டல். அதே வரிசையில் தான் கற்றது தமிழையும் வைத்துப் பார்த்தல் அவசியமென்று தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.
அருண்,
நான் இந்த படத்தினை விமர்சிக்கக்கூடாது என்று என்றைக்கும் சொல்லவில்லை. பொதுமக்களின் பார்வைக்கு வரும் எல்லா விஷயங்களும், விமர்சனத்துக்குரியவேயே, ஆனால் எந்தவிதமான விமர்சனங்கள் என்பதில் ஒரு தெளிவு இருப்பின் பிரச்சனைகளில்லை. தேமே என்று பார்க்கில் படுத்துக் கொல்லும் அன்னியனுக்கும், ஆதிக்கு எதிராக "யுகபுரட்சிகள்" செய்து நாட்டினை நேர்மையாக்கும் சிவாஜிக்கும் சொல்லப்படாத அல்லது பொதுவில் வைக்கப்படாத "சொல்லபட்ட கருத்தும், அது ஏற்படுத்தும் தவறான விளைவுகளும் தான் விமர்சனம் செய்ய படுகின்றன" என்கிற சொல்லாடல், கற்றது தமிழுக்கு மட்டும் எப்படி பொருந்தும்? இந்த படத்தின் நாயகன் செய்வது எல்லாம் நியாயமா ? என்றால், நீங்கள் நாயகனாய் இருந்து பார்த்தால் நியாயம். என்ன ஒரே பிரச்சனை, பிரபாகர், வேலு நாயக்கர் அல்ல, அதனால், நாலு பேருக்கு செய்யாமல், தனக்கான நியாயத்தினை செய்ததால், இவ்வளவு பிரச்சனைகள். ;)
தமிழ் சினிமா கெட்டு போய் 15-20 வருடங்கள் ஆகின்றன. "வேறு வழியில்லாமல்" சட்டத்தை கையில் எடுத்துக்கொல்(ள்)வது "வேறு வழியில்லாமல்" விபசாரத்துக்கு போவது என்று அப்போதே ஆரம்பித்துவிட்டது. இப்போதெல்லாம் நான் வெகு அரிதாகவே சினிமா பார்ப்பதால் கருத்து சொல்ல முடியவில்லை.
ஒரே ஒரு விசித்திரமான விஷயம். பல கால கட்டங்களை பார்த்தால் பொலம்பல்கள் ஒன்றேதான். டிகிரிதான் வித்தியாசப்படுகின்றன.
திவா
//2000 வருஷத் தமிழுக்கு 2000, 25 வருஷ கம்ப்யூட்ட்டருக்கு 2 லட்சமா?
2000 வருஷத் தமிழுக்கு 2000, 100 வருஷ சினிமாவிர்க்கு 20 கோடியா?
எவனுக்கும் வெட்கமில்லை. தமிழை வைத்து வியாபாரம் செய்யும் ஜென்மங்கள், என்று திருந்துமோ?
Post a Comment