என் ரத்தத்தின் ஹீமோக்ளொபினான என் அன்புப்பங்காளிகளே,
இற்றைத் தினம், நமது ப ம கவின் உள்கட்சிக்குள் குழப்பம் நடப்பதாக ஏடுகள் விஷம் கக்கி இருக்கின்றன. நமது 500 ஆண்டு கொள்கைப்பணியில் நாம் பொருத போர்கள் எத்தனை, நம் மீது வீசப்பட்ட அவதூறுகள்தான் எத்தனை? அத்தனையையும் மீறி நெருப்பாற்றில் நீந்திவந்த தங்கங்கள், சங்கம் வளர்த்த சிங்கங்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தி இருக்கின்றனவா?
ஜனநாயகம் என்பதை வார்த்தையாக இல்லாமல் வாழ்க்கையாக ஆக்கிக்காட்டியவர் எங்கள் தங்கத் தலைவர் சின்ன மாஸ்க்கார். (பெரிய மாஸ்க்கார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், சின்ன மாஸ்க்காரே கட்சிப்பணிகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்.) வெளிப்படையாகக் கருத்து கூறி பழக்கம் இல்லாத எதிர்கட்சித் தலைவர்கள் இதைக் கோஷ்டிப்பூசல் என்கின்றனர். சிறுத்தைப்புலிக்கும் சின்னப்பூனைக்கும் தன்னால்தான் வேறுபாடு காண இயலாது, சொன்னாலுமா இயலாது?
சிறுசிறு தள்ளுமுள்ளுகள் எல்லா சமுதாய அமைப்புகளிலும் சாத்தியமே, அவற்றை பேசியே தீர்த்துக்கொள்வது எங்கள் பாணி. பேசாமல் தீர்த்துக் கொல்வதையே பாணியாகக் கொண்டோரின் சிறுமதியில் இவை ஏறினால்தான் வியப்பு, ஏறாவிட்டால் என்ன வியப்பு?
கழகத்தின் போர்வாள், ரஷ்யச் சிறப்பு பொதுச்செயலாளர், என் ஆருயிர்த் தம்பி இரேசுநாதர் என் மேல் ஒரு களங்கத்தைச் சுமத்தினார் என்று கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறது ஊடகம். இதில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம் கட்சியின் கொள்கைகளோடு முழு ஒப்புமையும், "என்று ஒருவன் காலை பதினொரு மணிக்கு அலுவலகத்தில் வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறானோ அன்றே நாம் விரும்பும் கரிகால்சோழ ராஜ்யம் நடக்கிறது என்று பொருள்" என்ற நமது கழகத்தின் லட்சியத்தில் நாட்டமும் கொண்ட ஒரு கட்சி என்பதால், ஒரு இயல்பான மக்கள் கூட்டணி ஏற்படலாம் என்று முதல்கட்டப்பேச்சு வார்த்தைகளை பொதுச்செயலாளர் அனுமதிபெற்று உங்கள் அபிமானம் பெற்ற பினாத்தலார் நடாத்தி வந்தார்.
அவ்வமயம், வ வா சவின் தலைவர் மாண்புமிகு கைப்பு அவர்கள், வலையக வன்முறையின் உச்சத்தை, பார்த்திபன், கட்டதுரை மற்றும் சரளாக்கா வாயிலாக சந்தித்து உடல் நலம் சரியில்லாமல் போனதோடு, அலுவலக வேலை செய்ய வேண்டிய அவலநிலைக்கும் ஆளானார். எனவே அவர் தனது கட்சிப்பொறுப்பை விட்டால் போதும் என்று சென்னையில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கும் சிலர்வசம் ஒப்படைத்தார். அவர் பாவம் அறியவில்லை - இந்த கச்சேரி நடத்துபவர்கள் நீண்ட நெடிய ப ம க வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்று. நமக்கு கைப்புவிடம் எந்தக் குறையும் இல்லை. தவறான கட்சியில் சரியான நபர் என்பதே அவர் பற்றிய நமது கருத்தாகும்.
புதிதாகப் பொறுப்பில் அமர்ந்த வேகத்தில், பல அறிக்கைகளையும், திரிக்கப்பட்ட பல செய்திகளையும் தாங்கி ஊடக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் கச்சேரியார். அதில் ஒரு கனவிலும் நினையாத செய்தி - ப ம க வ வா ச கூட்டணி என்பது! பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே அப்படி ஒரு தகவல் வெளியிட்டவரை, கூட்டணிக்கொள்கை நெறிப்படி, கண்டிக்காமல் விட்டதே பினாத்தலாரின் பிழை என்பது, ரஷ்ய மட்டும் நியூ ஜெர்சி வட்டார ப ம க வின் குற்றச்சாட்டு.
பினாத்தலார் தன் தவறை ஒப்புக்கொண்டதோடு, கச்சேரியார் செய்த பிழைக்காக அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பத்தைக் குறைத்து, தற்போது ஒரே ஒரு தொகுதி மட்டுமே வ வா சவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அதிலும், "ஸ்விங் இன் த ரெயின்" புகழ் ஸ்டீவ் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படுவார். இதில் வருத்தம் இருந்தால், கூட்டணிக்கான கதவுகள் (வெளிப்பக்கம்) திறந்தே இருக்கிறது என்றும் அறிவிக்கிறார்.
படம்:
பி /\ ரா /\ மு/\ இ
மேற்கண்ட படத்தில், கைகளை இணைத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பவர்கள்:
இடமிருந்து வலம்: புரட்சிப்பினாத்தலார், ரஷ்ய மருத்துவர் மால்விரும்பி, (ராமநாதன் என்பது பூர்வாசிரமப்பெயர்), இணையில்லா (இப்போது இணையத்தில் இல்லா) தலைவர் முகமூடி, நியூ ஜெர்சி வட்டார கொ ப செ இலவச அண்ணல்.
4 பின்னூட்டங்கள்:
நான் கானோமே அந்த கூட்டத்துல என் போட்டோவ காணோம். :((
அதான் ஜீவ்ஸ் நாங்களும் சொல்றோம்.. நீங்க இல்ல அங்க.. ;)
ராஜகுருவே, உங்கள் உதவியாளரிடம் கேட்டதில் தாங்கள் இலவசமாக இல்லை என்று கூறவே, உங்களை மறந்தோம்! ஆனால் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள்!
ஒரு பத்து நாள் வெளியூர் போயிட்டு வரதுக்குள்ளே ஆளையே கவுத்துட்டீங்களே.
Post a Comment