Apr 16, 2006

Bhasha India தேர்தலில் பினாத்தல்கள்

படம் எடுக்கத் துவங்கியாகிவிட்டபின் அடுத்த கட்டம் என்ன?
 
அரசியல்தானே? நேரடியாக பொதுத் தேர்தலில் பங்கு கொள்ளும் முன் ஒரு முன்னோட்டமாக (விஜயகாந்தின் நடிகர் சங்கத் தேர்தல் மாதிரி) பினாத்தல்  Bhasha India வின் தேர்தலில் - தமிழ் வலைப்பதிவுகள் - பொழுதுபோக்கு (Entertainment) என்ற பிரிவில் போட்டியிடுகிறார்.
 
என் ரசிகக்கண்மணிகளுக்கு மேற்படி சமாச்சாரம் தெரிந்தாலே போதும், அமோக வெற்றியை அள்ளிக்கொடுத்திடுவார் என்ற போதிலும், தேர்தல் என்றாலே ஒரு தேர்தல் அறிக்கை இருக்கவேண்டும் என்ற மரபின் காரணமாக, இந்தப்பதிவு வெளியிடப்படுகிறது.
 
தேர்தல் அறிக்கை
 
தமிழ் கூறும் நல்லுலகத்தில் வலைப்பூக்களின் பேராதரவோடு உங்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் நான், என்னுடைய மூத்த ரசிகர்களின் (நானே என்று அறிக) நிர்ப்பந்தத்தால் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறேன். உங்கள் அமோக ஆதரவை எனக்கு அளிப்பதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை பட்டியல் இடுவதில் உள்ளபடியே பேருவகை கொள்கிறேன்.
 
ஜாதி, மதச் சண்டைப்பதிவுகள், தனி நபர் அவதூறுப்பதிவுகள், ஏழுபக்கப்பதிவில் புரியும்படி இரண்டே வார்த்தைகள் கொண்ட பின் நவீனத்துவ இருத்தலியல் பதிவுகள், ஒன்றின் கீழொன்றாய் வார்த்தைகள் ஜாலம் செய்யும் கவிதைப்பதிவுகள் ஆகியவற்றுக்கிடையே, உங்களின் மனமகிழ்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டு, படிப்பவர் சிரிக்க வேண்டும், ஏன் சிரித்தோம் என்று சிந்தித்துவிடவே கூடாது என்ற உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பினாத்தல்கள், உங்கள் மத்தியிலே ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக தமிழ்ச்சேவை(?) புரிந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் கடந்துவந்தபாதையில் வைரஸ்கள்தான் எத்தனை, பார்க்கப்படாத பதிவுகள்தான் எத்தனை? பின்னூட்டங்களே இல்லாவிட்டாலும் உங்களுக்காக கீபோர்டு தேயும் வரை உழைக்க முடிவெடுத்தவன்தான் இந்தப்பினாத்தல். பிளாக்கர் வேலை செய்யாவிட்டால் மெயிலால் பதிவிடுவேன், மெயிலும் தொலைந்தால் செல்பேசியால் பதிவிடுவேன் என்று உங்களை விடாமல் உருகும் (உருக்கும்) உங்கள் அன்புத் தம்பி, இன்று ஓட்டுக்கேட்க வந்திருக்கிறேன்.
என் சாதனைகளைப் பட்டியலிட்டு மாளாது (அப்படி சொல்றதுதாங்க மரபு) என்பதால், அதை விடுத்து, நாம் செய்ய இருப்பதை மட்டுமே பட்டியலிடுகிறேன்.
 
1.வீட்டுக்கொரு ப்ராட்பேண்டு தொடர்பு:
 
நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், பசியால் வாடும் அனைவருக்கும் உடனடியாக இண்டர்நெட் தொடர்பு வழங்கப்ப்டும். இதன் மூலம், பொழுதுபோக்கு பெற்று, அனைவரும் பசியை மறந்து வாழ்ந்து, பசியில்லாச் சமுதாயம் அமைய வழி செய்வோம்.
 
உப வாக்குறுதி:
 
இண்டர்நெட் வழங்கும் நாங்கள் கணினி வழங்காமலா போய்விடுவோம், தேவைப்பட்டால் அதையும் செய்வோம்.
 
ஏற்கனவே பிராட்பேண்டு உள்ள வீடுகளில், இரண்டாவது பிராட்பேண்டு வழங்குவோம்.
 
இந்த வாக்குறுதிக்கும், பிராட்பேண்டு வழங்கும் உரிமையை அண்மையில் பெற்ற என் சித்தப்பா பையனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை உறுதிபடக்கூறுகிறோம்.
 
2. அனைவருக்கும் ரீசைக்கிள் பின்:
 
சைக்கிள் கொடுத்ததை சாதனையாகப் பறைசாற்றுபவர்கள், ரீசைக்கிள் பின் கொடுக்காமல் நாட்டைக் குப்பையாகவே வைத்திருக்கிறார்கள். எனவே நாம் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையொப்பமே அனைவருக்கும் ரீசைக்கிள் பின் வழங்குவோம்.
 
3. காதுகுளிர MP3:
 
இணையத்தில் கிடைக்கும் பல குறைதரப் பாடல்களால் போதை ஏறிக்கிடக்கும் மக்களுக்கு, காதுகுளிர உயர்தர MP3 பாடல்களை அரசு சார்பில் இலவசமாக வழங்குவோம். இதனால், பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கமுடிவதோடு, பல லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள், சுத்தமான போதையோடு பொழுதுபோக்க முடியும்,
 
4. நேரடியாக திரைப்படம்:
 
ஃப்ளாஷ் தொழில்நுட்பத்தில் இயங்கும் திரைப்படங்களை உங்கள் கணினிக்கே நேராகக்கொண்டுவந்து டவுன்லோடு செய்வோம். எந்த வலைத்தளத்திலும் உறுப்பினராய்ச்சேராமல், டவுன்லோடு செய்ய வரிசையில் நிற்காமல் னேரடியாக உங்கள் கணினிக்கே வந்துசேர ஆவன செய்வோம்.
 
5. இலவச மென்பொருள் திட்டம்:
 
நாட்டில் பெரிய அளவில் பைரஸி எனப்படும் மென்பொருள் திருட்ட நடந்தவண்ணம் உள்ளது. அதைத் தடுக்க, பைரஸி சட்டபூர்வமாக்கப்படும். இதன்மூலம் மென்பொருள் அனைவருக்கும் இலவசமாகவும், துரிதமாகவும் கிடைக்க வழிசெய்வோம்.
 
எனவே, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம்:
 
இந்தத் தளத்துக்குச் சென்று உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுங்கள்.
 
தொடர்ந்து வரும் வாக்குச்சீட்டில், தமிழ் - பொழுதுபோக்கு என்பதைத் தேர்வுசெய்து, பினாத்தல்களுக்கு ஆதரவு அளியுங்கள்.
 
கள்ள ஓட்டுகள், நல்ல ஓட்டுகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.


18 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

:-))))))))))))))))))

சீக்கிரம் ரெண்டாவது ப்ராட்பேண்ட் தரணும். இல்லேன்னா ஓட்டு காலி:-)

நற்கீரன் said...

வழமைபோல கலக்கல்தான். :-)
(திறந்த மூலம் என்றால் ஓட்டு உங்களுக்குத்தான், அவர்கள் வியாபார கணிப்பீடு நடத்துகின்றார்கள். பங்குகொள்ள தயக்கம்!)

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா,

தேர்தல் அறிக்கையின் விரிவான பிரசுரத்தைப் பார்த்தால் கீழ்க்கண்ட வாசகங்கள் தெரியும்:

பிராட்பேண்ட் வழங்கப்படத் தகுதியானவர்கள்:

1.வயது 3க்கு கீழோ அல்லது 120க்கு மேலோ உள்ள ஆண்வாக்காளர்கள்

2. வயது 90க்குமேல் என ஒத்துக்கொள்ளும் பெண் வாக்காளர்கள்

3. தமிழகத்தின் கிழ்க்கு எல்லையைத் தாண்டி 20 கிமீதூரத்துக்குள் (கிழக்குப்பக்கம் உள்ளவர்கள்)

4. இன்னும் மின்சார வசதி பெறாத அனைத்துப் பகுதிகள்
- மேற்கண்ட பிரிவுகளுக்குள் நீங்கள் இருந்தால் பிராட்பேண்ட் நிச்சயம், தருவதே என் லட்சியம்.

நற்கீரன் - நன்றி, ஆமாம், ஓட்டுப்போடுவதை ரொம்பத்தான் சிக்கலாக்கிவிட்டார்கள்.

கிறுக்கன் - நன்றி - இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் பலர் ரணகளமாயி இருக்காங்க:-)

Unknown said...

பினாத்தாலாரே.. மூணாவது வேட்பாளர் பட்டியல் ரெடியாகிட்டு இருக்கு....கூட்டணிப் பத்தி பேசலாமா? உங்களுக்கு எத்தனைத் தொகுதி வேணும்... நம்ம மருத்துவர் அய்யா ராமனாதன் தலைமையிலான ப.ம.க ஐரோப்பாவும் நம்ம கூட்டணியிலே இணைஞ்சது உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்....

லக்கிலுக் said...

நீங்கள் தேர்தல் களத்துக்கு வாருங்கள்... என் ஓட்டு உங்களுக்கு தான்....

தகடூர் கோபி(Gopi) said...

ஓட்டு போட்டுட்டமுங்க..

Anonymous said...

என்னுடைய வோட்டு நிராகரிக்கப்பட்டு மூன்று முறையும் நேற்றில�

Geetha Sambasivam said...

என்னுடைய வோட்டு நிராகரிக்கப்பட்டு மூன்று முறையும் நேற்றிலிருந்து invalid name என்று வந்து விட்டது. அநேகமாக எங்கள் ஓட்டுப் பெட்டியில் ஏதோ சதி என்று நினைக்கிறேன்.எங்கள் booth voting officer-ம் சதியில் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளேன்.

பினாத்தல் சுரேஷ் said...

தேவ், நன்றி. நம்முது சீரியஸ் தேர்தல் தலை.. அவசியம் ஓட்டுப்போடுடுங்க!

மத்தபடி, அண்ணன் கைப்புவின் முதுகில் இன்னும் சில விழுப்புண்கள் என்னால் ஏற நான் பாக்கியமல்லவா செய்திருக்கவேண்டும்? கொள்கைக்கூட்டணி அமைச்சுடலாம்!

பார்றா.. லக்கிலுக் கட்சி மாறிட்டாரு!

நன்றி கோபி.. இதுவரைக்கு பாசிடிவா வந்த ஒரே ஓட்டு உங்களதுதான் சார்!

நன்றி கீதா, எப்படிப் போராட்டம் நடத்தலாம்? 15 னிமிடம் உண்ணாவிரதம் வெச்சுக்கலாமா?

Geetha Sambasivam said...

15 நிமிடம் எல்லாம் கொஞ்சமே கொஞ்சம். வேண்டுமானால் ஒரு நிமிடம் வைத்துக் கொள்ளலாம். இதுவரை யாருமே இருந்தது இல்லை.

rv said...

யோவ் தேவு!
என்னய்யா அநியாயம் இது? இதுக்கு பினாத்தலார் வேற உடந்தையா?

பமக உங்க கட்சியில இணஞ்சுதா? நல்லாவே திரிக்கிறீர்கள். நேத்தைய மழையில் தேங்கிய சேத்துக்குட்டை மாதிரி இருக்கற உங்க கட்சியில, பசிபிக் மகாசமுத்திரம் மாதிரியான எங்க கட்சி இணையறதா? இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லையென்றால், உங்களுடன் மொத்தமாக இருக்கிற பத்துபேரை சேர்த்துக்கொண்டு இந்த உலகத்தைவிட்டே ஓடவேண்டியிருக்கும்.

மக்களோடான எங்கள் உணர்வுக்கூட்டணியில், நீங்களும் பங்கெடுத்து பயன்பெறணும்னா வாங்கன்னு நான் அழைப்பு விடுத்தா நாங்க வந்து சேந்தா மாதிரி டகால்டி வேலை பண்ணுறீரு?

---
பமக சிங்கங்களுக்கு ஒரு நற்செய்தி,

பெங்களூர் வட்டச் செயலாளாராக ஆன்மிக ஆழ்கடல், சொற்பொழிவு சிங்கம், தமிழ் போர்வாள், ஒப்பிலா அன்பு அண்ணன் கோ. இராகவன் ப.ம.க வில் இணைந்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 லிருந்து தலைவரின் அறிவுரைப்படி அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.

பினாத்தல் சுரேஷ் said...

ரஷ்யப் பொதுச்செயலாளரே,

கூட்டணி பற்றிய முடிவை எடுக்க தலைவர் விடுமுறையில் செல்லும் முன் (எங்கேதான் போனாரு?) எனக்கு பொதுக்குழுவையும் செயற்குழுவையும் அதிகாரம் அளிக்கவைத்துவிட்டுத்தான் சென்றார் என்பது இடையில் காணாமல் போன உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கூட்டணியில் எது மூத்த கட்சி, எது இளைய கட்சி என்பது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்தே இருக்கிறது, இருப்பினும் உங்கள் துடிப்பை நான் பாராட்டி, இதயத்தில் இடம் கொடுக்கிறேன்.

ஆனால் இதற்கு இவ்வளவு துடிக்கும் நீர், தேர்தலில் எனக்கு ஓட்டுப்போட்டீரா என்பதைச் சொல்லாமல் சென்றது ஏன்?

ராகவன் வரவு காலத்தின் கட்டாயம். ஜோதியில் ஐக்கியமாகி வென்றிட நம் வாழ்த்துகள்!

rv said...

ப.ம.க தொண்டனுக்கு ஒருஅவசர கடிதம்

rv said...

வெத்து வாக்குறுதிகளுக்காக இல்லாவிடினும் (அந்த சைட்ல அட்ரஸ் தந்திருக்கிறேன்!) வோட்டு போட்டாச்சு. முன்னாள் உறுப்பினர் என்ற பற்றுதான் ஒரே காரணம்.

இலவசக்கொத்தனார் said...

கொ.ப.செ. அவர்களே,
தலைவர் உங்களுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் பேச மட்டும்தான் அனுமதி அளித்திருந்தாரே தவிர கட்சியின் தன்மானத்தை அடகு வைக்கும் உரிமையைத் தரவில்லையே.

நமது மாபெரும் இயக்கத்தின் நகக்கண் அளவு கூட இல்லாத ஒரு கட்சி. அவர்களோடு நாம் கூட்டணி வைக்க அவர்களிடம் சென்றோமாம். அதை நீர் இருக்கும் மேடையிலேயே ஒருவர் சொல்கிறார். அதற்கு மறு பேச்சில்லை.
இப்படி சும்மா இருக்க நீர் என்ன 'என் இனிய தமிழ் மக்களே'ன்னு திரைப்படம் எடுப்பவரா அல்லது அவரது சொந்தமா?
(உம்ம படத்தில் அப்படி ஒண்ணும் இல்லையே!)

இதனை எதிர்த்து குரல் கொடுத்திருக்கும் நம் ரஷ்ய பனிக்கரடி (சும்மா எவ்வளவு நாளுக்குத்தான் சிங்கம், சிறுத்தைன்னே சொல்லறது) பொதுப்பாட்டின் தலைவர், வலைப்பதிவு வல்லவர், மருத்துவர் இராம்ஸுக்கு வட அமெரிக்க கண்ட பிரதிநிதி என்ற முறையில் எமது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

வோட்டு போட முடியலை. எங்க ஊரு பின் கோடு தப்பாமே. நான் என்ன பண்ணறது?

பினாத்தல் சுரேஷ் said...

இராமநாதர், இலவசனார் - உங்கள் தவறான எண்ணம் களையப்பட்டுவிட்டதன்றோ?

இலவசக்கொத்தனார் said...

இப்போ எல்லாம் சரியா போச்சு. ஆனாலும் அந்த வெ.பசங்களை முதலிலேயே தட்டி வச்சிருந்தீங்கன்னா இப்படி ஒரு பேச்சே வந்திருக்காதில்ல.

 

blogger templates | Make Money Online