Oct 29, 2007

பாடம் ஒன்று: ஏன் திருமணம்? (M Sc Wifeology - 1)

இந்தக்கேள்விக்கு நேரடியான விடையே கிடையாது. கண்ணதாசன் சொன்ன மாதிரி, நான் மாட்டின காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் கேட்கிறாய்னுதான் கேட்கணும்.
 
"everybody should be married.. in fact, happiness is not everything" னு சொன்ன அறிஞரோட விடைதான் கொஞ்சம் கிட்டக்கிட்ட வருது.
 
ரொம்ப யோசிச்சா, இந்த மாதிரி சில காரணங்களைத் தேடிப் பிடிக்கலாம்.
 
1. நாளைக்கு வயசாயி உடம்பு சரியில்லாம போனா பாத்துக்க ஒரு ஆளு வேணாம்? (மனைவி வேணுமா நர்ஸ் வேணுமான்னு தெரியாத ஆளுங்க! - நாளைக்கு உனக்கு வயசாகும்போது அவங்களுக்கும் வயசாகாதா? வெளிய சொல்லிக்கறத நாம நம்பவா முடியும்??)
 
2. வம்சம் விளங்க வேணாமா? (பெரிய ராஜ ராஜ சோழன் வம்சம்!)
 
3. எத்தனை நாள்தான் இப்படி வாழ்க்கையில பிடிப்பே இல்லாம ஓட்ட முடியும்? (மவனே இருக்குடீ உனக்கு! வாயுப்பிடிப்பு., சதைப்பிடிப்பு, சம்பளப்பிடிப்பு எல்லாம் கிடைக்கும் கவலையே படாதே!)
 
4. வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணுமே! (ஸ்விட்சுன்னு ஒண்ணு எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்களாம்?)
 
5.சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேணாம் இல்லையா? (இது கரெக்டு.. எப்படியும் சமைக்கக் கத்துக்கத்தான் போறே!)
 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன அப்ப்டின்னு சொல்லும்போதே தெரிய வாணாம்? மவனே உனக்கு சாவுமணிதாண்டான்னு!
 
கல்யாணம் ஆனவங்களோட பொறாமை மற்றவர்களோட திருமணத்துக்குக் காரணமாகி விடுவது உளவியல் அறிஞர்கள் ஆராய வேண்டிய விஷயம்.  "என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "நான் மட்டும் என்ன முட்டாளா?" என்ற எண்ணமும் "எஞ்சாய் பண்றாண்டா" என்ற பொறாமையும் இருப்பது திண்ணம்.
 
பெரியோர் நிச்சயித்த கல்யாணத்துக்கும், காதல் திருமணத்துக்கும் கொலைக்கும் தற்கொலைக்கும் ஆன வித்தியாசம்தான் என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
 
ஆனால், மத்தவங்க என்ன சொன்னாலும், வேறு சில சிற்றின்பக் காரணங்களுக்காக, "கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?
 
சிற்றின்பம்னு சொன்னதும் இந்தப்பதிவுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துடாதீங்க! நான் சொல்ல வர சிற்றின்பம், பெரியோர் ஆசீர்வாதத்துடன் சைட்டடிப்பது, நாம என்னவோ ஆணழகன் மாதிரி எந்த போட்டோ வந்தாலும் "Forehead ஆ இது? Four Head மாதிரி இருக்கே!" "பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னாங்களே? மூக்கை மட்டும்தான் சொன்னாங்களா?" என்று வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் கமெண்ட் அடிப்பது, திடுதிப்பென்று கிடைக ்கும் எலுமிச்சை வெளிச்சம் போன்ற சிற்றின்பங்களைச் சொல்றேன்.
 
ஆனா ஒண்ணு.. கல்யாணம் பண்ணாம நிம்மதியா இருக்கறது 1 - 2% ஆளுங்கதான். ஆடை இல்லாத ஊரிலே கோவணம் கட்ட முடியாதவங்க எப்ப்டி கல்யாணத்துக்கு தயார் ஆவது எப்படின்னு அடுத்த திங்கள் சொல்றேன்.
 
வீட்டுப்பாடம்: இந்த யூ ட்யூப் வீடியோவைப் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=pSWTVXh_Yns
 
ஒரு டிஸ்கிளெய்மர்:
 
பிரச்சினையில்லாத திருமண வாழ்வை இந்த வகுப்புகள் வழங்கும் என்ற உடோபியக்கனவுகளை நம்பவேண்டாம். அது ஒரு மாயை.  இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மீள்பார்வையில் Retrospective  சிந்தனைகளின் விளைவே இந்த வகுப்புகள். இது ஒரு Exact Science உம் கிடையாது. மனைவிகள் என்னும் பிரகிருதிகளுடான உளவியலில் Scienceக்கும் எந்த இடமும் கிடையாது, Exact கும் எந்த இடமும் கிடையாது. இந்த வழிமுறைகளை முயற்சிப்பவர்கள் தத்தம் சொந்தப் பொறுப்பின் பெயரிலேயெ செயல் படுபவர்கள் ஆவார்கள். மீறி ஏற்படும் வீக்கங்களுக்கும் ரத்தகாயங்களுக்கும் கல்லூரி பொறுப்பேற்காது.

Oct 25, 2007

முதுகலை இல்லறத்தியல் - வகுப்புகள் ஆரம்பம் (1)

M.Sc Wifeology (முதுகலை இல்லறத்தியல்) படித்த படிக்காத அன்பர்களே!
 
கல்யாணம் கட்டிக்கிட்டு கஷ்டப்படும் கட்டிளங்காளைகளே!
 
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!
 
கணவனை அன்பாக நடத்தும் 0.0000000000000001% மனைவிகளே!
 
மிச்சம் உள்ள சாதாரண ரக மனைவிகளே!
 
இது உங்களுக்காகவே ஆரம்பிக்கப்படும் புத்தம் புதிய வகுப்பு.
 
இந்த வகுப்புகளைப் பற்றி சில அ கே கே (FAQ)
 
என்ன சொல்லித் தரப்போகிறேன்?
 
  • திருமண வாழ்வில் பிரச்சினை கிளப்பக்கூடிய நிகழ்வுகள் யாவை, அவற்றைச் சமாளிப்பது எங்ஙனம்?
  • மனைவிகளைக் கண்டு பயப்படாமல் வாழ்வது எப்படி?
  • உங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுக்காமல் இல்வாழ்வை நல்வாழ்வாக மாற்றுவது எப்படி?
  • வீட்டு வேலைகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
  • மனைவி கேட்பதை வாங்கித்தராமலே அடிவாங்கா வாழ்க்கை வாழ்வது எப்படி? 
 
இப்படிப்பட்ட
 
  • How to survive Matrimony  என்பதைப் பற்றிய எளிய பாடங்கள் 
  • வாழ்க்கைத் தேர்வில் எளிதாய் வென்றிட ஏற்றமிகு கருத்துகள்
 நான் யார்? எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
 
M.Sc Wifeology யில் பட்டம் பெற்ற மாணவன், பின்னூட்டங்களில் முனைவர் பட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டவன். கடுமையான சூழலுக்கு நடுவே ஏறத்தாழ பத்து ஆண்டுகள் களப்பணி செய்து வருபவன்.
 பாடத்தில் சொல்லப்போவதையெல்லாம் நான் கடைப்பிடிக்கிறேனா?
 
கிரிக்கெட்டில் பேட்டிங் சொல்லிக்கொடுக்கும் கோச் அவர் பேட் செய்கையில் அவுட்டே ஆகாதவரா? ஆனால் தன் / பிறரின் தவறுகளில் இருந்து பாடம் கற்பவர். அப்படித்தான் நானும். எனக்கும் வீங்கிய கன்னங்கள், சிராய்ப்புகள், விழுப்புண்கள் இருந்திருக்கின்றன. (இதைச் சொல்ல என்ன வெட்கம் - அதுவும் நமக்குள்ளே)
 யார் யார் பாடம் எடுக்கப்போகிறார்கள்?
 
நீங்களும் நானும்தான். உங்கள் பங்களிப்பும் மிக அவசியம். நிகழ்வுகளைக் கூறினால் அதற்கு துறை ஆசிரியர் குழு நடக்கவேண்டிய முறைக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள்.அவ்வப்போது How to survive Matrimony என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்து, காணாமல் போன புத்தகத்தின் நினைவில் இருக்கும் பக்கங்களும் விஸிட்டிங் ப்ரொபசராக வரும்.
 படிப்பின் முடிவில் என்ன பட்டம் வழங்கப்படும்?
 
உங்கள் திறமை, கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை வைத்து M B A (Marriage - Beginner's Approval), B.L (Beginner's Licence), M Tech (Marriage Technologist), PHD (Problem-free Household Doctorate), MBBS (Bachelor of Marriage and Bachelor of Solutions) ஆகிய பட்டங்கள் வழங்கப்படும்.
 
bcom, ca, cwa போன்ற பட்டங்களை சேர்க்காமல் விட்டது கணக்குப் பண்ணாதீங்கடா என்ற உள்குத்தின் காரணமாகவே. இது போன்ற பல மறை பாடங்கள் இருக்கும். ஆகவே ஆழ்ந்து படிக்கவும்.
 மனைவிகளை ஏன் இவ்வகுப்பில் அழைக்கிறேன்?
 
கீழ்க்கண்ட அரை டஜன் காரணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்:
 
  1. எதிரியின் நுணுக்கங்களை அறிந்துகொள்வது ராஜதந்திரம்.
  2. களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
  3. கணவன்மாரின் பார்வையில் இஷ்டம் எது கஷ்டம் எது என்பதை அறிந்துகொண்டால், நமக்குத் தேவையானதுபோல செய்ய முடியும்.
  4. அழைக்கவில்லையென்றால் ஈயம் பித்தளை என்று என்னையும் கட்டம் கட்டிவிடுவீர்கள்.
  5. பாடத்தில் ரோல்ப்ளே போன்ற கட்டங்கள் வரும்போது, நல்ல இயல்பான நடிகர்கள் தேவைப்படுவார்கள்
  6. நாலு முட்டா பசங்க மேடையேறி பேசினா வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வருமே. வரப் போற கூட்டத்தை வாங்கன்னு கூப்பிட்டுடலாமேன்னுதான்
 வகுப்புகளுக்கு என்ன கட்டணம்?
 
இப்போது ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ஒரு பின்னூட்டம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம். பின்னூட்டம் என்பது வருகைப் பதிவு மட்டுமல்ல, அதில் கேள்விகளும் விடையும் கலந்த ப்ராஜக்ட் வொர்க்கும் உண்டு.
 வகுப்புகள் எப்போது ஆரம்பம்?
 29 அக்ட் திங்கள் முதல்.

Oct 21, 2007

கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம் (22 Oct 07)

மைலாப்பூர் எம் எல் ஏ என்று ஒரு வலைப்பதிவு வந்திருக்கிறதாம் - இட்லிவடை பதிவில் பார்த்தேன்! தெலுங்குப்படம் இல்லையாம் - நெஜமாவே மைலாப்பூர் தொகுதி எம் எல் ஏ எஸ் வி சேகர்தான் நடத்தறாராம்.

யோசிச்சுப்பார்த்தா மனசுக்குள்ளே கலவரம். இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிச்சா, வலைப்பதிவை மட்டுமே நம்பிப் பொழைப்பு நடத்தற நம்மையெல்லாம் வெளியே தள்ளிட்டு இந்த அரசியல்வாதிகள், சினிமாக்காரங்க எல்லாம் ஜகஜ்ஜோதியா விளையாட ஆரம்பிச்சிடுவாங்களே! (ஆமாம், ஒரு டவுட்டு - எஸ் வி சேகர் சினிமாக்காரரா? அரசியல்வாதியா?)

இப்படி ஒரு காலம் வரக்கூடாதுன்னு நீங்க நம்பற ஆண்டவனையோ இயற்கையையோ வேண்டிகிட்டு, நெருப்புன்னா வாய் வெந்துடாதுன்றதால கீழே இருக்க கற்பனையைப்பாருங்க! Shift+ click பண்ணீங்கன்னா தனியா பெரிசா தெரியும்.


அதையும் மீறி படிக்க முடியலைன்னா எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க, வெள்ளெழுத்து ஸ்பெஷல் அனுப்பறேன் :-)

PDF கோப்பாக இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அல்லது, படத்தின் மேல் ரைட் க்ளிக்கி, உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொண்டால், பிக்சர் எடிட்டர் மூலம் பெரியதாக்கி பார்த்துக்கொள்ளலாம்.

Oct 17, 2007

பினாத்துறதும் ஒரு பொழப்பா - சாத்தான்குளத்தார் சாடல்! (17 Oct 07)

சாத்தான் குளத்தாரே தொடரட்டும்:

 
"கடை விரித்தேன் ..கொள்வாரில்லை என்று கூற முடியாது.
என் வலைப்பதிவையும் சிலரேனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்பதற்கு சில பின்னூட்டங்கள் சாட்சி. இருப்பினும், பதிவது அலுத்துப் போய் விட்டது.

எழுத வரவில்லை என்பது முக்கிய காரணம்.

தீவிர எழுத்து ஒரு தவம் போல. அப்படி எழுத ஒருமுகப்பட்ட சிந்தனை, இடைவிடாத படிப்பு, கொள்கை உறுதி போன்ற பல குணங்கள் தேவைப்படுகின்றன. என் நுனிப்புல் மேய்விற்கு இது சரிப்படாது" எழுத ஆரம்பித்த சில பதிவுகளிலேயே இப்படி அலுத்துக்கொண்ட பெனாத்தலாருக்கு,

எலே மக்கா,
என்னலே புதுக்கத சொல்லுதே? எழுதுதவன் எல்லாம் வெவரமாத்தான் எழுதணும்னு எவம்லே சொன்னது? அப்படில்லாம் பாத்தா நானெல்லாம் எழுதியிருப்பனாலே? பெனாத்துறதை நிறுத்துற மாதிரி ஒரு பெனாத்தல் உலகத்துலேயே கெடயாது மக்கா" அப்படின்னு ஆறுதல் சொல்லி அழைச்சுட்டு வந்த பாவம்தான் இன்னைக்கு பெருமரமாய் வளர்ந்து நிக்குது.:-)) என்னாலயும் சில நல்லதெல்லாம் நடந்திருக்குதுன்னு நான் அப்பப்ப நம்புறது இந்த மாதிரி விசயங்களை வச்சுத்தான்

கார் கதவை ஒரு மனுசன் மெதுவா தொறந்து விடுறான்னா ஒன்னு கார் புதுசா இருக்கணும் அல்லது காருக்குள்ல இருக்குற பொண்டாட்டியோ / சின்ன வீடோ/ காதலியோ புதுசா இருக்கணும்கறதுதான் நியதி. புதுசா இருக்குற வரைக்கும் எல்லாம் பிரம்மாதம்தான்.- சோடா பாட்டில் பொங்குற மாதிரி.ஆனா, தொடர்ந்து எழுதவும் எழுதுனதைப் படிக்க ஆட்களைத் தக்க வச்சுக்கறதும் பெரிய பாடு - அதுவும் நாளுக்கு நாலு பதிவுகள் வரத்துவங்கியிருக்கும் கால கட்டத்தில். பெனாத்தலைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னைக்கு இடமில்லை. அவர் எழுதினால் வாசிப்பதற்கென்று மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏனென்றால் எழுதினால் வாசிக்கும்படியாக இருக்குமென்ற நம்பிக்கையை இந்த மூன்றாண்டுகளில் அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். இன்றைய சூழலில் இப்படி ஒரு நம்பிக்கையைப் பெறுவதென்பதே பெரிய விசயம்தானே?

கிரிக்கெட்டில் நன்றாக செட்டில் ஆகி விட்ட பேட்ஸ்மேனுக்கு கிரிகெட் பந்து ஃபுட்பால் அளவுக்குப் பெருசாகத் தெரியுமாம். பெனாத்தல் இப்போது அம்மாதிரி தமிழ்வலைப்பூவுலக வீச்சுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது.

மோட்டுவளையை வெறித்துக் கொண்டு நவீனத்தை படுத்துபவ்ர்கள், கவிதையை வேட்டியை உருவி விடும்வரை விட்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைராக்கியத்தோடு வலம் வரும் கவிஞர்கள்,  கழுத்து வலிக்க வலிக்கத் திரும்பிப் பார்க்கும் மலரும் நினைவுகள், திரும்பத் திரும்ப மொக்கைகள் என்று ஒரே மாதிரியாகவே எழுதுபர்களுக்கு மத்தியில் சுரேஷின் எழுத்து எல்லாம் கலந்த கதம்பமாக இருக்கிறது

சிறுகதை, கவிதை, அரசியல், சமூக அக்கறை, திரைப் பார்வை, இலக்கியம் குறித்த அலசல்கள், ஃப்ளாஷ் தொழிநுட்ப உதவியுடன் கலாய்த்தல்கள் என்று பன்முகம் கொண்ட பதிவுகளாக அவை விரவிக் கிடக்கின்றன. எல்லாவற்றிலுமே வாசிப்பவர்களை ஈர்க்கும் விதம் மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. அடிப்படையில் தனது எழுத்து எந்த சார்புநிலைக்குள்ளும் புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை மனப்பான்மையோடு எழுதுவதே இதற்குக் காரணம்.

"பிம்பங்கள் இல்லாத நேரத்தில், பக்கச்சார்புகள் இல்லாமல் சிந்திக்கவும் அதீதக்கோபமோ, அதீதப்பாசமோ இல்லாமல் விமர்சிக்க முடிகிறது . எந்த அரசியல்வாதியினாலும் தனிப்பட்ட ஆதாயமோ, பாதிப்போ அடையாததால், பிம்பங்கள் ஏதும் இன்றி, நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை அமைத்துக்கொள்ள முடிகிறது." என்று சுயவிமர்சனம் செய்து கொள்ள முடிவதுதான் சுரேஷின் இன்னொரு முக்கிய பலம் .

விக்கி பசங்களில் பங்களித்தாலும் சரி, வருத்தப்படாத வாலிபராக வலம் வந்தாலும் சரி; கில்லிக்கு வாசிப்புரை எழுதினாலும் சரி; இன்னமும் அவரை ஓரம்கட்டி முத்திரை குத்தி யாரும் சாத்திவிடாமல் தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதே கூட மூன்றாண்டு கால சாதனையை விட மிக உயர்ந்த சாதனைதான்.

பற்றியெரியும் சேது சமுத்திரத் திட்டமானாலும் சரி, உபி தேர்தலில் பாஜக வெளியிட்ட விசிடி பற்றிய பார்வையாக இருந்தாலும் சரி, அமீரகத்தில் இந்துக்களுக்கு எதிரான நிலை இருப்பதாகப் புரளி பரவியபோது அதனை மறுத்து எழுதிய போதும் சரி - தனது நிலையை மிகத் தெளிவாகச் சொல்லும் நேர்மை அவருக்கு வாய்த்திருப்பது பாராட்டுக்குரியது.

கவிமடத்தின் தலைமைச் சீடனாக இருந்தும் கூட கவுஜை எழுதி ஆட்களைத் தாளிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் எப்போதேனும் மட்டும் கவிதையை எழுதுவதும், அந்தக் கவிதை கவிதையாகவே இருப்பதும் அதனாலேயே அவர் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதும் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. அதற்காகக் கவிமடத்தின் பெருமையைக் காப்பாற்றவும் அவர் தவறியதில்லை. அவர் எழுதிய காப்பி கசக்கும் கவிதை ஒரு உதாரணம்

தேன்கூடு சிறுகதைப் போட்டியில் வெற்றி, சிறந்த தமிழ் பதிவர் , அவள் விகடனே அங்கீகாரம் தந்த அவன் விகடன் எனப் பல சிறப்புகள் இருந்தபோதும் அது பற்றிய அலட்டல் அதிகம் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கண்டால் ஓடிச்சென்று வாழ்த்துவதும், குறையென்று கண்டால் விவாதிப்பதும் கூட சுரேஷின் சிறப்புகளில் முக்கியமானதெனக் கருதுகிறேன்

விக்கி பசங்களுக்காக தனது துறை சார்ந்த பதிவில் மிகச் சிறப்பான தமிழில் எளிய விளக்கங்கள் அளிக்க் முடிந்த அவரால் சில பதிவுகளில் தமிங்கலத்தைத் தவிர்க்க முடியாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை குறைதான்.

வித்தியாசமாக யோசிப்பது, நக்கைச்சுவை மிளிர எழுதுவது இவை இரண்டும்தான் பெனாத்தலின் மிகப் பெரிய பலம். போக்கிரி படத்தில் விஜயின் முகபாவங்களை அவர் சொல்லியிருந்த விதம் நினைத்தாலே இன்னமும் சிரிப்பை வரவழைக்கிறது. 'அம்மு'வை எல்லாரும் 'ஆஹா ஓஹோ' என்று சொல்லும்போது கூட்டத்தில் கோவிந்தா போடாமல் 'அடப் போங்கய்யா! இதெல்லாம் ஒரு படமா?' என்று கேட்கும் துணிச்சலும் சுரேசுக்கு நிறையவே இருக்கிறது

நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவதும் அப்படி எழுத முடியுமளவுக்கு நிறைய கற்பனை வளம் இருப்பதும் டப்பாவில் இன்னமும் பெருங்காயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.
 
மணிரத்னம் இயக்கும் குருசாமி நாயகன் (பெரியார்) Full Screenplay

ஆனால் தீவிரமான கட்டுரைகளையும் கூட அவ்வப்போது எழுதித்தான் வந்திருக்கிறார். பிஹார் பற்றிய கட்டுரையும் ஆளாளுக்கு எட்டு போட்டு அலைக்கழித்த/கழிந்த நேரத்தில் சீரியஸாய் போட்ட எட்டும் முக்கியமானவை

ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -
நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -
தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

இந்தக் கவிதையைப் போலத்தான் தமிழ்மணத்தின் இன்றைய சூழலும். எப்போதும் இல்லாவிட்டாலும் அவ்வப்போதேனும் நல்ல பதிவுகள் வருமென்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை ஏற்படுவதற்கு சுரேஷ் போன்ற பதிவர்களும் ஒரு காரணமென்று உறுதியாகச் சொல்லலாம்.
---------------------
ஆசிப்புக்கு நன்றி. இந்த மூன்று ஆண்டுகளாய் என்னைப் பொறுத்துவந்தது மட்டுமின்றி அமோக ஆதரவும் அளித்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நாலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
 
 

Oct 10, 2007

அம்முவாகிய வீண்!

விகடன் விமர்சனத்தையும் தருமி விமர்சனத்தையும், கேள்விப்பட்ட கதை முடிச்சையும் வைத்து நல்ல படமாக இருக்குமோ என்ற ஒரு தோற்றம் கிடைத்ததால்தான் இந்த திராபையைப் பார்த்தேன், நொந்தேன்.
 
கதைக்களன் வித்தியாசமானதுதான், முதல் முறை இல்லையென்றாலும் கூட. விளிம்பு மாந்தர்களைக் கதையெழுதும் எழுத்தாளர் ஒரு விலைமாதுவை மணம் முடிக்க அதனால் ஏற்படும் சிக்கல்களைச் சொல்லும் எளிய கதையை, திரைக்கதை, பாத்திரப்படைப்பு என்று எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.
 
முதலில் அம்மு! என்ன கதாபாத்திரம் என்றே முதல் பாகத்தில் புரியவில்லை. அந்தத் தொழில் பிடித்துதான் செய்கிறாள் என்பது வித்தியாசமாக இருந்தாலும், புற உலகம் ஒன்றுமே தெரியாமல் வளர்ந்திருக்கிறாள் என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. வியாதி வந்து காணாமல் போன சக தொழிலாளியைப்பற்றி, அவளுக்கு வந்த வியாதியைப்பற்றி ஒன்றுமே தெரியாமலா இருப்பாள்? புற உலகத்தின் மீது அலட்சியமாக இருப்பவர் (indifferent) எனக்காட்ட நினைத்து அறியாதவர் (ignorant) என்றே காட்டப்பட்டு இருக்கிறது இந்தப்பாத்திரம். என்னைக்கட்டிக்கவே ஆள் இருக்கு என்பதைப் பெருமையாகப் பேசுவாராம், ஆனால் தாயிடம் பேசும்போது திருமணத்தினால் ஆன பயனென்கொல் என்று வாதிடுவாராம். அந்தப்பெண்ணின் திறமையான நடிப்பு இந்த ஓட்டைக் கதாபாத்திரத்தால் காணாமல் போகிறது.
 
அடுத்து அந்த எழுத்தாளர். எந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. விளிம்பு மாந்தர்களின் துயரை இரண்டு முறை எழுதிவிட்டாராம், விருது கிடைக்கவில்லையாம், மூன்றாம் முறையாக விலைமாதுக்கள் பற்றி எழுதப் புறப்பட்டாராம். விருதுக்காக விலைமாதுவின் கதையை விற்பதுதான் அவர் நோக்கமா? நிஜமான எழுத்தாளர்களுக்கு வெட்கக்கேடு! அவ்வப்போது மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு தத்துவம் பேசிவிட்டால் மட்டும் எழுத்தாளர் ஆகிவிட முடியுமா?
 
நிஜமான துயருடன், அத்தொழிலை விட்டு ஓடவேண்டும் என்று ஆயிரம் பெண்கள் காத்திருக்க, இந்தப்பெண்ணை இவர் தேர்ந்தெடுக்கும் காரணம் சுத்தமாகப் புரியவில்லை. அந்தக்காரணங்களை விளக்க திரைக்கதையில் விபூதி வைப்பது தவிர எந்த அழுத்தமான காட்சியும் இல்லை. ("நீங்க சீக்கிரமா விட்டுட்டீங்கன்னா கொஞ்சம் கணக்கு பழகிக்குவேன், நாளைக்கு அரைப்பரீட்சை" என்று சொன்ன வேலு நாயக்கனின் மனைவி ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை - அதுவும் ஒரே காட்சிதான்.. எவ்வளவு அழுத்தமாக இருந்தது!) திருமண வாழ்க்கைக்கு ஆசைப்படாத பெண்ணைத் திருமணம் முடித்து, அவளுக்கு வாழ்க்கையின் சந்தோஷங்களைப் புரியவைப்பதுதான் லட்சியம் என்றும் சித்தரிக்கப்படவில்லை! சரி போகட்டும், அழகும் அவருக்கு தேவைப்படுகிறது என்று விட்டுத் தள்ளலாம் என்றால், அவர் எழுதியதாகக் கூறப்படும் கதை!
 
அம்முவாகிய நான் என்று கதைக்குப் பெயர். சமர்ப்பணம் அம்முவுக்கு. பொதுமேடையிலேயே, இந்தக்கதாபாத்திரம் உண்மை, அம்முதான் என் மனைவி என்ற அறிக்கை. இதில் எங்கேயும், அம்முவின் வாழ்க்கை மேம்படவில்லை.. இப்படிப்பட்ட பெண்ணை மணம் செய்துகொண்டிருக்கிறேன் பார் - நான் எவ்வளவு நல்லவன் என்று தெரிந்துகொள் என்ற கீழ்த்தரமான விளம்பர யுக்திதான் தென்படுகிறது! (மீண்டும் வேலு நாயக்கன் - அவளுடைய முன்வாழ்க்கை பற்றி படத்தில் வேறெங்கும் பிரஸ்தாபிக்காமல் இருந்த தன்மை!)
 
எந்த அளவுக்கு ஹோம்வொர்க் செய்யாமல் படம் எடுத்திருக்கிறார் என்பதை விருதுக்கு கருதப்படும் புத்தகங்களே காட்டுகின்றன. ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் எழுதிய வாழ்க்கைப்பாடம், நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு, அம்முவாகிய நான் புனைகதை இவை மூன்றும் இறுதிகட்டத் தேர்வுக்காக இலக்கிய கழகத் தலைவர் கைக்கு வருகிறதாம்! என்ன ஒரு அஸ்ஸார்ட்மெண்ட்! சரி, கௌரிஷங்கருக்கு ஒரு அழகான மனைவி இருக்கிறாள், பெர்வர்ட் இலக்கிய கழகத் தலைவருக்குத் தீனி போட. ஆனால் ஸ்ரீஸ்ரீரவிஷங்கரும் நெல்சன் மண்டேலாவும் என்ன செய்திருப்பார்கள்? அப்படி என்ன விருது அது? நிஜமாக எழுத்தாளர்கள் அனைவரும் ஏங்கும் அளவுக்குத் தமிழுக்கு / இந்திய மொழிகளுக்கு ஏதேனும் அப்படி ஒரு விருது இருக்கிறதா?
 
இந்த ஓட்டைப் பாத்திரங்கள் தவிரவும் சில பாத்திரங்கள் இருக்கின்றன படத்தில். முக்கிய பாத்திரங்களே இப்படி என்னும்போது சைட் பாத்திரம் மட்டும் என்ன உருப்படியாகவா இருந்துவிடப்போகிறது? உயரியவிருது பெற ஆசைப்படும் எழுத்தாளரின் அக்கா இன்னும் கிமுவில், தன் மகளைத் தம்பிதான் திருமணம் முடிக்கவேண்டும் என்ற லட்சியத்தில் (நம் குடும்பத்துக்கு வாரிசு என் பெண் மூலம்தான் வரவேண்டும்-ஆம்!). மேற்படி எழுத்தாளரின் நண்பன் வெளிப்படையாகப் பேசுகிறவன் என்ற போர்வையில் "பத்தினியையா அனுப்பப்போறே, அவளுக்கு என்ன இது புதுசா? உன் விருதுதாண்டா முக்கியம்" என்று கேனத்தனமாக உளறுகிறான். முன்னாள் கஸ்டமர் "தங்கைன்னு சொன்னா கேவலம்" என்று நலம்விரும்பியாகிறான்!
 
கேனத்தனமான பாத்திரங்கள், சம்பவங்கள் பெரிதாக இல்லாமல் உருளும் திரைக்கதை (யாரோ சொல்லிட்டாங்க போல - ஸ்லோவா படம் இருந்தா விருது கிடைக்கும்னு).
 
இசை, பின்னணி இசை பற்றி சொல்லாமல் விடுவதே நலம்.
 
பாலசந்தர் என்று ஒரு டைரக்டர் இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா? அவருடைய தொண்டரடிப்பொடி போல இந்த டைரக்டர்! முதல் காட்சியில் புதிதாய்ப் பிறந்த அம்முவை விற்க அவள் அப்பா வரும்போது பின்னணியில் பழைய பேப்பர் விற்கும் காட்சியில் இந்த டைரக்டோரியல் டச்செல்லாம் இன்னுமா காலாவதி ஆகவில்லை என்ற கேள்விதான் எழும்புகிறது! ஒரு கொலை, திணிக்கப்பட்ட சோகமுடிவு.. பாலசந்தரின் படம் போலவே இருக்கிறது!
 
மன்னிச்சுக்கங்க தருமி.. உங்களைப்போல அம்முவாகிய நான் படம் நல்லா இருக்குன்னு என்னால சொல்ல முடியலை!
 
இது நல்ல படம் இல்லை. நல்ல படம் மாதிரி!

Oct 8, 2007

ஹாரி பாட்டரின் ஏழு வருடங்கள்

4 ஆவது புத்தகம் வெளிவரும் வரையில் எனக்கும் ஹாரி பாட்டர் ஒரு கூத்தாகத் தான் தெரிந்தது. கும்பல் மனப்பான்மையுடன் எல்லாரும் போய்விழும் அளவிற்கு அந்தக்கதைகளில் பெரிய உள்ளடக்கம் இருக்கும் என நான் நம்பவில்லை. என்னவோ பிலிம் காட்டறாங்கடா என்ற அளவில் ஒதுக்கியே இருந்தேன்.
 
ஆனால், நண்பர் வீட்டில் புத்தகத்தைப் பார்த்ததும் என்னதான் இருக்கு இதிலே என்று முதல் இரு பாகங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து, பலநாள் மறந்து, பிறகு திடீரென ஒரு உந்தம் கிடைத்துப் படித்தேன். பிறகு அடுத்தடுத்தவை, ஏழாம் பாகம் வெளிவந்த சில நாட்களிலேயே என்று மேக் அப் பண்ணிவிட்டேன்.
 
இப்போதும் ஹாரி பாட்டர் கதைகளை நான் படித்ததிலேயே பிடித்தது என்றோ, என் சிந்தனா முறைகளைப் புரட்டிப் போட்ட புத்தகம் என்றோ சொல்ல மாட்டேன். இப்போதும் ஹாரி பாட்டர் கதை / படம் வெளிவரும் நேரங்களில் நடக்கும் பில்ட் அப் ஓவராகத்தான் படுகிறது. ஆனால், சுவாரஸ்யமான கதைகளில் ஹாரி பாட்டருக்கு ஒரு தனியிடம் கொடுத்திருப்பதையும் மறைக்க மாட்டேன்.
 
தெரியாதவர்களுக்காக கதைகளின் அநியாயச் சுருக்கம்.
 
மந்திர உலகில் பிறந்தவன் ஹாரி. சிறுவயதில் அவன் தாயும் தந்தையும் மந்திர உலகின் ஆஸ்தான வில்லன் "உங்களுக்குத் தெரியும்" (you know who - பெயரைச்சொல்லக்கூட அனைவரும் பயப்படுவார்களாம்) வால்டமார்ட்டினால் கொல்லப்பட, அனாதையாகி, அம்மாவின் சாதா உலக அக்காவின் பராமரிப்பில் வளர்கிறான். சரியான வயது வந்ததும், மந்திரம் சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளிக்கு அழைக்கப்படுகிறான், ஏழு ஆண்டுகள் படிக்கிறான், நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதிக்கிறான், இறுதியாக மெயின் வில்லனைக் கொல்கிறான்.
 
ஏழு பாகத்துக்கும் இதான் சுருக்கம். இந்தக்கதையைத்தான் உலகம் கொண்டாடுகிறது! ஆனால் படிக்கத் தொடங்கினால் போதைக்கு உள்ளானது போல மொத்தத்தையும் படிக்கவைக்கும் ஆற்றல், ரௌலிங்கின் எழுத்துக்கு நிச்சயமாக இருக்கிறது.
 
படிக்காத சிலர், பொத்தாம்பொதுவாக, என்ன, மாயாஜாலக்கதைதானே.. அம்புலிமாமாவில் வராததா, பஞ்சதந்திரக்கதைகளில் இல்லாததா என்று ஸ்வீப்பிங்காகப் பேசும்போது, ஆமாம், நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், படிக்க ஆரம்பிக்கும் வரை என்றுதான் பதில் சொல்கிறேன்.
 
கற்பனையான ஒரு உலகத்தை ஸ்தாபித்ததோடு, அந்த உலகத்தின் நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்வதிலும், கதாபாத்திரங்களை உயிருடன் செதுக்குவதிலும் கவனத்தோடு செயல்பட்டிருக்கிறார் ரௌலிங். அதுவே நம்மைக் கட்டிப்போட்டு வைக்கின்றன.
 
மாயாஜால உலகிற்கும், நம்மைப்போன்ற மக்கிள்ஸ் மக்கள்ஸ் வாழும் சாதா உலகத்திற்கும் அடிக்கடி செய்யும் தொடர்பும் (மாயாஜால மந்திரி கேபினட்டில் ஒருவராம்:-) கதையை விட்டு வெகுதூரம் விலகிவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.
 
முழுக்கவே கற்பனையான மாயாஜால உலகாக இருந்தாலும், தர்க்கரீதி (அவரே உருவாக்கிய தர்க்கங்கள்)யாக சற்றும் பிறழாமல் ஏழு பாகங்கள் எழுதுவது அசாத்தியமான சாதனைதான். மந்திரங்கள் எப்படி சொல்லப்படவேண்டும், கஷாயங்கள் எப்படி காய்ச்சப்படவேண்டும், எந்த வயதுவரை மந்திரங்கள் சொல்லக்கூடாது, எந்த மந்திரங்கள் உயிர்க்கொல்லி, மந்திர உலகில் பலசாலி எப்படி நிர்ணயிக்கப்படுகிறான் போன்ற தர்க்கங்களை முதல் பாகத்தில் இருந்து ஏழாம் பாகம் வரை மாற்றவே இல்லை.
 
ஏழு வருடங்களில் சிறுவர்களின் எண்ணங்களில் ஏற்படும் மாற்றத்தை சித்தரிப்பதிலும் ரௌலிங் அபார வெற்றி பெற்றிருக்கிறார். 10 வயதில் புத்திசாலிப் பெண் ஹெர்மாய்னியைப் பார்த்து வெறுத்து ஒதுக்கும் ஹாரியும் அவன் நண்பன் ரானும், 16 வயதில் காதல்வசப்படுகிறார்கள். குவிட்டிட்ச் என்ற மாயர்விளையாட்டின் ஹீரோக்களின் படங்கள் அடங்கிய அட்டைகளைச் சேகரிப்பதை 13 - 14 வயதில் விட்டுவிடுகிறார்கள். முதல் இரு பாகங்களில் மெயின் வில்லனாக கூடப்படிப்பவன் சித்தரிக்கப்பட, 14 வயதில் வகுப்பின் ஆசிரியர் வில்லனாகிறார். 17 வயதாகும் ஹாரிக்கு வெளியுலகத்தில் பலவானாக இருக்கும் வில்லன் தேவைப்படுகிறான்.
 
கதாபாத்திரங்களுக்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். டம்பிள்டோர், ஸ்நேப், ஹாக்ரிட், வீஸ்லி குடும்பம், மால்பாய் குடும்பம் என்று ஏழு பாகங்களிலும் தொடரும் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, பெட்டிக்ரூ, சிரியஸ் ப்ளாக், ப்ளோரா போன்ற சில பாகங்களில் மட்டும் வருபவையாக இருந்தாலும் சரி, முதல் பாகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட குணாதிசயங்களை கடைசிவரை முரண் இல்லாமல் Consistency யோடு எழுதுவது பயங்கர சிரமம். முதல் காட்சியில் கோகுல் என்று வரும் இன்ஸ்பெக்டர், கடைசிக்காட்சியில் ரமேஷ் ஆவதெல்லாம் தமிழ்த் தொடர்கதைகளில் சகஜம். (நான் எழுதிய ஒரு சிறுகதையிலேயே தருமி இப்படி ஒரு பிழையைச் சுட்டிக்காட்டியிருந்தார்:-)
 
கதையாக மட்டுமே எழுதப்பட்ட முதல் பாகங்கள் வெற்றிகரமான திரைப்படங்கள் ஆகிவிட, கடைசிப்பாகங்கள் திரைக்கென்றே எழுதப்பட்டவை போல (முதல் காட்சி விறுவிறுப்பான மாயாஜாலம், பிறகு கொஞ்சம் அமைதியடைந்து மெதுவாக க்ளைமாக்ஸின் மெகா விறுவிறுப்புக்குத் தயார் செய்தல்) தெளிவாகவே தெரிகிறது. அதுவும் அந்த ஏழாம் பாகம் -  ஆரம்பத்தில் ஒரு பைட், பிறகு நண்பனின் வீட்டுத் திருமணம், பாதுககப்பான வீட்டை விட்டு வெளியே வந்து தேடல்கள், கடைசியில் பள்ளிக்கூடத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் பெரும் போர், செத்துப் பிழைக்கும் ஹீரோ -- கதை படிக்கிறேனா, பார்க்கிறேனா என்றே சொல்ல முடியவில்லை.
 
நட்பு, அண்ணன் தங்கை, காதலன் காதலி, அம்மா அப்பாவைக் கொன்றவனைப் பழிதீர்த்தல் என்று எந்த செண்டிமெண்டுக்கும் குறை வைக்காமல் நகர்கின்றன கதைகள்.
 
சிறுவர்களுக்கும் புரிதலில் கஷ்டம் இல்லாமல் செல்லும் எளிய நடை. (டிமெண்டார், அப்பாரிஷன், ட்ரேன்ஸ்பிகரேஷன் போன்ற வார்த்தைகள் புதியவருக்குக் கஷ்டமாக இருக்கலாம் - முதலில் இருந்து படிப்பவர்களுக்கு அவை மிக எளிய வார்த்தைகளே.)
 
எது எப்படி இருப்பினும், ப்ளே ஸ்டேஷன்களிலும், முட்டாள் பெட்டியின் முன்னும் செலவழிந்துகொண்டிருந்த பல சிறுவர்களை மீண்டும் படிக்கும் பழக்கத்தில் ஆழ்த்தியமைக்காகவே ரௌலிங்குக்கு ஒரு பெரிய ஓ போடலாம்.
 

 

blogger templates | Make Money Online